Published : 21 Sep 2018 04:32 PM
Last Updated : 21 Sep 2018 04:32 PM

சாதி பற்றி பேசும் காலம் முடிந்துவிட்டது: கருணாஸ் பேச்சு குறித்து கமல் கருத்து

சாதி பற்றி பேசும் காலம் முடிந்துவிட்டது என, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கடந்த திங்கள்கிழமை தன் ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய கருணாஸ் எம்எல்ஏ, முதல்வர் மற்றும் காவல்துறை அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்து பேசியதாக குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து, கருணாஸ் மீது கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், “கருணாஸ் என்ன சொன்னார் என்று தெரியாது. சாதியை மறக்கும் நேரம் வந்துவிட்ட நிலையில், அதனை விளையாட்டுக்குக் கூட பயன்படுத்தக் கூடாது. அதற்கு கருணாஸ் மன்னிப்பு கோரியதாக கேள்விப்பட்டேன். எனக்கு தெரியாது. மன்னிப்பு கேட்டிருந்தால் நியாயமானதுதான். சாதி பற்றி பேசும் காலம் முடிந்துவிட்டது. சாதி பற்றி பேசக்கூடாது என்பதுதான் என் கருத்து” என கூறினார்.

மேலும், சமீப காலமாக சுற்றுப்பயணம் மேற்கொள்வது மக்கள் மனதை அறியும் வாய்ப்பாக உள்ளது எனவும், நடிகராக இருந்தபோது இல்லாத பணிவு தற்போது வந்திருப்பதாக தெரிவித்தார்.

உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடுமா என்ற கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன், “ஆயத்தங்கள் இல்லாமல் எதுவும் செய்வதில் எங்களுக்கு நம்பிக்கையில்லை. உள்ளாட்சி தேர்தல் வரும்போது பார்த்துக் கொள்ளலாம்” என கூறினார்.

அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன், “ஊழலை ஒழிப்பதற்கு குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஆதாரத்துடன் கையும் களவுமாக பிடிபட வேண்டும். களவாடியவர்கள் அதிக சாதுர்யத்துடன் உள்ளனர்” என தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x