Published : 15 Sep 2018 03:46 PM
Last Updated : 15 Sep 2018 03:46 PM

திராவிட மொழிகளின் தாயகம் தமிழ் மொழி: முதல்வர் பழனிசாமி பேச்சு

திராவிட மொழிகளின் தாயகமாக விளங்குவது தமிழ் மொழி என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற புனித பீட்டர் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் திராவிட இயல் ஆய்வியல் நிறுவனத் தொடக்க விழாவில் கலந்துகொண்டார்,

அப்போது அவர் பேசியதாவது:

''இனமும், மொழியும் காக்கப்படுவதற்காக அண்ணா ஆற்றிய அரும்பணிகளைப் பற்றிய ஆய்வுகளை திராவிட இயல் ஆய்வு நிறுவனம் மேற்கொள்ள வேண்டும். அண்ணாவின் பொதுவாழ்வுக் காலத்தில், இளம் சமூகத்தினரிடம் இருந்த இனப்பற்றும், மொழிப்பற்றும் இன்றைக்கும் நிலவிட வேண்டும்.

திராவிட மொழிகளின் தாயகமாக விளங்குவது தமிழ் மொழி. தென்னிந்தியாவின் மற்ற திராவிட மொழிகளின் இலக்கியங்கள் கி.பி.8 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு தான் தோன்றியிருக்கிறது. ஆனால் தமிழ் இலக்கியத்திற்கு 30 நூற்றாண்டுகளுக்கு மேற்பட்ட ஆதார வளம் உள்ளது. அத்தகைய பழமையும், வளமையும் கொண்ட மொழி தமிழ் மொழி. தமிழ் மொழி மிகவும் மூத்த மொழி, முதன்மையான மொழி. எந்த மொழியின் துணை கொண்டும் இயங்காமல், தனிச் சொற்களைக் கொண்டு தனித்து இயங்கக்கூடிய ஒரு தனி மொழி என்பதை ஆராய்ச்சி மூலம் நிரூபிக்க வேண்டிய கடமையும், அவசியமும் தமிழர்களுக்கு ஏற்பட்டது.

ரிக் வேதத்திலேயே, திராவிட மொழிகளிலிருந்து பல சொற்கள் எடுத்து பயன்படுத்தப்பட்டுள்ளன. இதிலிருந்து திராவிட மொழிகளின் தொன்மையும், பெருமையும் புலப்படுகிறது.

மேலும், உலகில் மிகவும் பழமையான நாகரிகமாகக் கருதப்படும் சிந்து சமவெளி நாகரிகமே திராவிட நாகரிகமாகும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. திராவிட நாகரிகமும், திராவிட மொழிகளும் மிகமிகத் தொன்மையானது என்பதை நாம் அறிகிறோம். திராவிட மொழிகளில் திருந்திய மொழிகளாக அறியப்பட்ட 6 மொழிகளில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழிகள் பெருமொழிகள் என அழைக்கப்பட்டன.

சிந்து சமவெளி நாகரிகம், மொகஞ்சதாரோ, ஹரப்பா நாகரிகம் ஆகியவற்றை ஏற்படுத்தி, சிந்து, பஞ்சாப் பள்ளத்தாக்குகளில் திராவிடர்கள் நாகரிகத்துடன் வாழ்ந்து வந்தார்கள் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

நமது திராவிட மாநிலங்களிலுள்ள இயற்கை கொடைகளான மிகை நீரையும், மிகை மின்சாரத்தையும், உற்பத்தியாகின்ற உணவையும், மாநிலத்திற்கு மாநிலம் பகிர்ந்து உதவ வேண்டும்.

திராவிட இயல் ஆய்வு நிறுவனம், திராவிடக் கலாச்சாரம், பண்பாடு, மொழியின் வளம் ஆகியவற்றைப் பற்றிய விழிப்புணர்வை இளைய தலைமுறையினரிடையே ஏற்படுத்த வேண்டும். அதற்காக அண்ணாவின் படைப்புகள் மற்றும் பெரியாரின் சமூக நீதிச் சிந்தனைகளை மாணவர்களிடையே பரப்ப வேண்டும்.''

 இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x