Published : 30 Sep 2018 12:57 AM
Last Updated : 30 Sep 2018 12:57 AM

‘தூய்மை இந்தியா குறித்து பிரதமருக்கு தபால் அனுப்பும் போட்டி: புதுச்சேரி அரசு பள்ளி மாணவர் இந்திய அளவில் முதலிடம்

‘தூய்மை இந்தியா' திட்டம் குறித்து பிரதமருக்கு தபால் கார்டு அனுப்பும் போட்டியில் புதுச்சேரி அரசு பள்ளியைச் சேர்ந்த 4-ம் வகுப்பு மாணவர் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

புதுச்சேரி சேந்தநத்தம் அரசு தொடக்கப் பள்ளியில் 4-ம் வகுப்பு படிக்கும் மாணவர் சஞ்சீவ். அதே பகுதியில் வசிக்கும் மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்த டைல்ஸ் தொழிலாளி பூராசாமி - வளர்மதி ஆகியோரின் மகனான இவர், தூய்மை இந்தியா திட்டம் குறித்த தங்களது கருத்துகளை தபால் அட்டையில் எழுதி பிரதமருக்கு அனுப்பும் போட்டியில் பங்கேற்றார்.

சஞ்சீவ் எழுதிய தபால் அட்டை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டது. கடந்த 15-ம் தேதி நடைபெற்ற இந்தப் போட்டியில் நாடு முழுவதும் இருந்து பல்வேறு மாணவர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் இந்திய அளவில் முதல் இடத்தை பெற்றுள்ளார் புதுச்சேரி மாணவர் சஞ்சீவி. அவருக்கு வரும் 2-ம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் காந்தி ஜெயந்தி விழாவில் பிரதமர் பரிசளிக்கிறார்.

மாணவர் சஞ்சீவுடன் டெல்லி செல்ல உள்ள, பள்ளித் தலைமை ஆசிரியை செல்வி கூறியது: பள்ளியில் கடந்த 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை 'ஸ்வாஷ்தா பக்வாடா' (துாய்மை நிகழ்வுகள்) எனும் பெயரில் தொடர்ந்து, 15 நாட்கள் பள்ளியில் தூய்மை பணிகள் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. இறுதி நாளான 15-ம் தேதி தூய்மை இந்தியா திட்டம் குறித்து பிரதமருக்கு தபால் அட்டை அனுப்பும் போட்டி நடந்தது.

அதை நாங்கள், புதுச்சேரி கல்வித்துறைக்கு அனுப்பி வைத்தோம். கல்வித்துறை அதிகாரிகள் அதனை அனுப்பி வைத்தனர்.

இவர்களில் இந்திய அளவில் சஞ்சீவ் முதலிடம் பிடித்துள்ளார். இது எங்கள் பள்ளிக்கும், எங்களுக்கும் மிகுந்த பெருமையாக உள்ளது. இதில் எல்லா ஆசிரியர்களின் பங்களிப்பும் இருக்கிறது. எங்கள் பள்ளி சில நாட்களுக்கு முன்பு நாட்டின் சிறந்த தூய்மை பள்ளிகளில் 3-ம் இடத்தை பிடித்து மத்திய அரசின் பாராட்டை பெற்றுள்ளது’ என்று பெருமையுடன் தெரிவித்தார்.

பிரதமருக்கு தான் எழுதிய கடிதத்தில், உடை தூய்மை, உடல் தூய்மை, ஊர் தூய்மை பற்றி குறிப்பிட்டுள்ளதாக மாணவர் சஞ்சீவ் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x