Published : 08 Sep 2018 07:47 PM
Last Updated : 08 Sep 2018 07:47 PM

மூடிய டாஸ்மாக் கடையை திறக்கக் கோரி பெண்கள் விநோத போராட்டம்: போதையில் கிடக்கும் கணவர்களை தேட முடியாததால் தலைகீழ் முடிவு

டாஸ்மாக் கடையை மூடச்சொல்லி போராட்டம் நடத்திய பெண்கள் தற்போது திறக்கச்சொல்லி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. போதையில் கிடக்கும் கணவர்களை தேட முடியாததால் இந்த முடிவு என கூறியுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம், சாலாமேடு பகுதியில் இயங்கி வந்த டாஸ்மாக் கடை மூன்று மாதத்திற்கு முன் அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் போராட்டம் நடத்தி மூட வைத்தனர். இதையடுத்து கடை 5 கிலோ மீட்டர் தள்ளி திறக்கப்பட்டது.

இதனால் மது அருந்தும் ஆண்கள் 5 கிலோ மீட்டர் தூரம் சென்று மது குடிக்கும் நிலை ஏற்பட்டது. அங்கு குடித்தப்பின் போதை அதிகமானவர்கள் அங்கேயே விழுந்து கிடந்தனர், சிலர் வரும் வழியில் விழுந்து கிடந்தனர். வேலைக்கு சென்ற வீட்டு கணவர் திரும்பவில்லையே என தேடிப்போகும் பெண்கள் பல கிலோ மீட்டருக்கு அப்பால் கணவர்கள் போதையில் கிடப்பதை பார்த்து அழைத்து வரும் நிலை ஏற்பட்டது.

இதனால் செலவும், அலைச்சலும், நேர விரயமும் ஏற்பட்டது. இதையடுத்து ஊருக்குள்ளேயே கடை இருந்தால் இங்கேயே குடித்துவிட்டு எங்காவது விழுந்துக்கிடப்பார்கள் நாமும் போய் கூட்டிட்டு வரலாம் 5 கிலோ மீட்டருக்கு அப்பால் கடை இருப்பதால் எவ்வளவு சிரமம் என பெண்கள் அவர்களுக்குள் பேசிக்கொண்டனர்.

இதையடுத்து தங்கள் ஊரில் தாங்கள் 3 மாதத்துக்கு முன் போராடி மூட வைத்த டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்கக்கோரி போரட்டத்தில் ஈடுபட்டனர். வேண்டும் வேண்டும் டாஸ்மாக் வேண்டும் என்று பெண்கள் கோஷமிட்டனர். அவர்களுடன் சில குடிமகன்களும் சேர்ந்து கோஷமிட்டனர்.

பாதுகாப்புக்கு வந்த போலீஸார் இதைப் பார்த்து ஆச்சர்யமடைந்தனர். இதற்கிடையே டாஸ்மாக் கடையை மூடுவதற்கு காரணமாக இருந்த பெண்கள் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மீண்டும் டாஸ்மாக் கடை திறந்தால் தீக்குளித்து தற்கொலை செய்துகொள்வோம் என அவர்கள் மிரட்டியதால் போலீஸார் திகைத்து நின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x