Published : 23 Sep 2018 02:29 PM
Last Updated : 23 Sep 2018 02:29 PM

‘பாஜக தலைவர் பதவியை ஏற்க தயார்’ - ஓ அப்படிக் கேட்டீர்களா? என்று பதிலை மாற்றிய எஸ்.வி.சேகர்

பாஜக தலைவர் பதவியை ஏற்கத்தயார் என்றும் வாய்ப்பளித்தால் இப்போதுள்ளதைவிட கூடுதல் வாக்கு வங்கியை பெற்றுத்தரத்தயார் என கேள்வியை தவறாக புரிந்துக்கொண்டு பதிலளித்தார் எஸ்.வி.சேகர்.

தமிழிசை 2014 ஆகஸ்ட் முதல் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக பதவி வகித்து வருகிறார்.2019-ம் ஆண்டு வரை இந்த பதவியில் நீடிப்பார். பாஜகவில் உள்ள மாநிலத் தலைவர்களில் தமிழகத்தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மட்டுமே பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழிசைக்கு பின்னர் பாஜக தலைவராகும் முயற்சியில் பலரும் ஈடுபட்டு வருகின்றனர். தமிழிசை பாஜக தலைவரானாலும் தமிழகத்தில் கடந்த 4.5 ஆண்டுகளில் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லை. இந்நிலையில் பலமுறை தமிழிசை மாற்றப்படுகிறார், ஹெச்.ராஜா போன்றோர் தலைவராக்கப்படலாம் என்ற கருத்து எழுந்தது.

ஆனாலும் தமிழிசை வலுவான தலைவராக உள்ளார். இந்நிலையில் சமீபத்தில் பெண் பத்திரியாளர்களை குறித்து அவதூறாக முகநூலில் பதிவிட்டு சட்டப்பிரச்சினையை சந்தித்து கைதாகாமல் தப்பித்த எஸ்.வி.சேகர் இன்றுவரை விமர்சிக்கப்பட்டு வருகிறார்.

ஆரம்பத்தில் அதிமுக உறுப்பினராக இருந்த எஸ்.வி.சேகர் 2006-ல் மயிலாப்பூர் எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் 2009-ல் அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர் எந்தக்கட்சியிலும்சேராமல் இருந்த அவர் 2011-ல் காங்கிரஸில் இணைந்தார்.

பின்னர் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். சமீபத்தில் சர்ச்சையில் சிக்கிய எஸ்.வி.சேகர் கைது நடவடிக்கையிலிருந்து தப்பித்தது பாஜகவிலிருந்ததால்தான் என விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று விருதுநகர், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு வந்த அவர் கோவிலில் வழிபாடு நடத்தினார்.

பின்னர் வெளியே வந்த அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். எஸ்.வி.சேகரிடம், தமிழக பாஜக தலைமையை நீங்கள் ஏற்கவில்லை என்ற கருத்து உள்ளதால் செயற்குழுவுக்கு உங்களை அழைக்கவில்லை என்கிறார்களே என்ற கேள்வி எழுப்பினர்.

இந்தக் கேள்வியை தவறாகப் புரிந்து கொண்ட அவர், பாஜக தலைமையை ஏற்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக ஏற்றுக்கொண்டு இப்போது உள்ள வாக்கு வங்கியை விட அதிக வாக்கு வங்கியை என்னால் உருவாக்க முடியும் என்று தெரிவித்தார்.

இதனால் திடுக்கிட்ட செய்தியாளர்கள் நாங்க அப்படி கேட்கவில்லை பாஜக தலைமையை தாங்கள் மதிக்காமல் இருப்பது போன்ற தோற்றம் உள்ளதே என பொருள்படும் ரீதியில் கேட்டோம் என்று கேள்வியை மீண்டும் கேட்டனர்.

ஓ அப்படி கேட்டீர்களா? நம்மை அழைத்தால் தான் போக முடியும். நான் ஏற்றுக்கொள்கிறேனா என்பது என்ன எனக்கு புரியவில்லை. அதற்காக தினமும் தமிழிசை வீட்டு முன் நின்று அக்கா நான் வந்துட்டேன்னு சொல்லணுமா? அவங்க எனக்கு வயசுல சின்னவங்க அப்படியே சொல்லணும் என்றால் தங்கச்சி என்றுதான் கூறவேண்டும் என்று தெரிவித்தார். தமிழக பாஜக தலைவர் பதவியை தாம் ஏற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்து எஸ்.வி.சேகர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x