Published : 19 Sep 2018 09:36 AM
Last Updated : 19 Sep 2018 09:36 AM

தமிழகத்துக்கு கூடுதலாக நிலக்கரி வழங்க வேண்டும்: பியூஷ் கோயலிடம் அமைச்சர் தங்கமணி நேரில் வலியுறுத்தல்

தமிழகத்துக்கு கூடுதல் நிலக்கரியை வழங்குமாறு, மத்திய நிலக்கரி துறை அமைச்சர் பியூஷ் கோயலை, தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி டெல்லியில் நேற்று நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தார்.

தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு இருப்பதாகவும் போதிய நிலக்கரி கையிருப்பில் இல்லை எனவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில், போதிய அளவு நிலக்கரியை மத்திய அரசிடம் இருந்து பெறுவதற்காக தமிழக மின்துறை அமைச்சர் பி.தங்கமணி நேற்று டெல்லி சென்று மத்திய ரயில்வே மற்றும் நிலக்கரி துறை அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் விக்ரம் கபூர் உடனிருந்தார்.

பின்னர், மத்திய எரிசக்தி துறை இணை அமைச்சர் ஆர்.கே.சிங்கை அமைச்சர் தங்கமணி சந்தித்துப் பேசினார். அப்போது, மத்திய தொகுப்பில் இருந்து கூடுதல் மின்சாரம் வழங்குமாறு கோரினார்.

அதனைத்தொடர்ந்து அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் மின்வெட்டு இருப்பதாக எதிர்க்கட்சிகள் மக்கள் மத்தியில் பீதியை கிளப்பி வருகின்றனர். எப்போதுமே தமிழகத்தில் மின்வெட்டு வராது. தமிழகம் மின்மிகை மாநிலமாக உள்ளதாக மத்திய அரசு அறிக்கை அளித்துள்ளது. மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை காற்றாலை மின்சாரம் இருக்கும். அந்த சமயத்தில் மத்திய, மாநில அனல்மின் நிலையங்களில் ஓரிரு மாதங்கள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். செப்டம்பர் முதல் வாரம் காற்றாலை மின்சாரம் திடீரென்று 3 ஆயிரம் மெகாவாட்டில் இருந்து பூஜ்யம் அளவுக்கு வந்து விட்டது. எனவே, கடந்த 9 மற்றும் 10-ம் தேதிகளில் தமிழகத்தில் சுழற்சி முறையில் மின்வெட்டு ஏற்பட்டது. உடனடியாக அனல்மின் நிலையங்களில் உற்பத்தி தொடங்கப்பட்டதோடு, மத்திய தொகுப்பில் இருந்தும் மின்சாரம் கேட்டு பெறப்பட்டதால் தமிழகத்தில் அடுத்த நாளே சகஜ நிலை திரும்பி விட்டது.

நிலக்கரியை பொறுத்தவரை தமிழகத்தில் உள்ள அனல்மின் நிலையங்களில் 15 நாட்களுக்குத் தேவையான நிலக்கரியை இருப்பு வைத்திருப்போம். கடந்த வாரம் ஒரிசாவில் பெய்த கனமழை காரணமாக நிலக்கரியை கொண்டு வருவது குறைந்து விட்டது. இதனால், கையிருப்பில் இருந்த நிலக்கரி குறையத் தொடங்கியது. எனினும், 4 நாட்களுக்கு மேட்டூரிலும் 3 நாட்களுக்கு வடசென்னையிலும் 6 நாட்களுக்கு தூத்துக்குடியிலும் உள்ள அனல்மின் நிலையங்களில் நிலக்கரி கையிருப்பு உள்ளது.

தினசரி நிலக்கரியைக் கொண்டு வருவதற்காக 16 வேகன்கள் வழங்கப்படுகின்றன. இதை 20 வேகன்களாக உயர்த்தித் தருமாறு மத்திய அமைச்சர் பியூஷ்கோய லிடம் கேட்டுள்ளோம். தமிழகத்தைப் பொறுத்தவரை நிலக்கரி தட்டுப்பாடில்லை. 15 நாட்களுக்குத் தேவையான நிலக்கரியை கையிருப்பில் வைப்பதற்காகத் தான் கூடுதல் நிலக்கரியை வழங் கும்படி மத்திய அரசிடம் கோரியுள்ளோம். மேலும், வெளிநாடுகளில் இருந்து 30 லட்சம் டன் நிலக்கரியை இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து, டெண்டர் விடப்பட்டு தூத்துக்குடி அனல்மின் நிலையத்துக்கு 6 லட்சம் டன் நிலக்கரி உடனடியாக கொண்டு வர ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் தங்கமணி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x