

கரூரில் நேற்று நடைபெற்ற மாநில திருக்குறள் மாநாட்டில் பங்கேற்க வந்த தமிழர் தேசிய முன்னணி கட்சியின் மாநில தலைவர் பழ.நெடுமாறன். செய்தியாளர்களிடம் கூறியது:
முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக பெங்களூரு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு இதுவரை இந்திய வரலாற்றிலே அளிக்கப்படாத தீர்ப்பு. இந்த தண்டனை, ஊழல் அரசியல்வாதிகள் அனைவருக்கும் அடிக்கப்பட்டுள்ள எச்சரிக்கை மணியாகும்.
2ஜி ஊழல் வழக்கு போன்ற வழக்கு களுக்கு விரைவாக தீர்ப்புகள் வரும் போதுதான், ஊழல் அரசியல்வாதிகளை பொது வாழ்க்கையில் இருந்து அப்புறப்படுத்த முடியும்.
இந்த தீர்ப்பு தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக அதிமுகவினர் நாடெங்கும் நடத்தி வரும் போராட்டங்களை வன்மையாக கண்டிக்கிறேன். இவர்கள் மீது தமிழக காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்ப்பதன் மூலம் பொதுமக்களின் நலன்களுக்கு எதிராக காவல் துறையும், அதிமுகவினரும் இணைந்து செயல்படுவதை வன்மையாக கண்டிக்கிறேன். இவ்வாறு நெடுமாறன் கூறினார்.
மாநில துணைத் தலைவர் பழனியாண்டி, பொதுச் செயலர்கள் சதாமுத்துக்கிருஷ்ணன், முருகேசன், இளைஞரணி செயலர் கா.தமிழ்வேங்கை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
கருணாநிதியும், விஜயகாந்தும்…
குளித்தலையில் நடைபெற்ற தமிழர் முன்னணி இயக்க மாவட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று அவர் பேசியபோது, “திமுக தலைவர் கருணாநிதி, எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் இருவரும் சட்டப்பேரவைக்கு செல்வதில்லை. வாக்களித்த மக்களுக்காக மக்கள் மன்றத்தில் அவர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தாத இருவரும் தங்கள் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும்” என்றார்.