Published : 07 Sep 2018 01:21 PM
Last Updated : 07 Sep 2018 01:21 PM

மது, கஞ்சா செய்யும் மாயம்: ரயில் தண்டவாளத்தில் சிமெண்ட் ஸ்லாப் வைத்த மாணவர்கள் 3 பேர் கைது

வேளச்சேரி- பெருங்குடி இடையில் ரயில் தண்டவாளத்தில் சிமெண்ட் சிலாப்பை வைத்த விவகாரத்தில் ஐடிஐ பயிலும் 3 மாணவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னையில் வேளச்சேரியிலிருந்து கடற்கரை வரை பறக்கும் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் தற்போது அதிக அளவில் பயணிகள் பிரயாணம் செய்ய ஆரம்பித்துள்ளனர். பறக்கும் ரயில்சேவை புறநகர் ரயில் சேவையுடன் இணைக்கப்பட்டுள்ளது. ரயில் சேவையை அதிக அளவில் பயணிகள் பயன்படுத்தினாலும் பராமரிப்பு சரியில்லை என்பது பயணிகளின் குற்றச்சாட்டாக உள்ளது.

ரயில் நிலையங்களில் போதிய பராமரிப்பு, பாதுகாப்பின்மை காரணமாக சமூக விரோதிகள் அதை பயன்படுத்திக் கொள்கின்றனர். இதனால் பயணிகள் அச்சத்துடன் பயணிக்கும் நிலை உள்ளது. சில இடங்களில் வழிப்பறி நடக்கிறது.

குறிப்பாக பெருங்குடி, வேளச்சேரி, தரமணி, திருவான்மியூர், திருவல்லிக்கேணி கோட்டூர்புரம் உள்ளிட்ட ஸ்டேஷன்கள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பாதுகாப்பின்றி உள்ளதாக பயணிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

வேளச்சேரி-பெருங்குடி இடையே கடந்த மாதம் 31-ம் தேதி விஷமிகள் சிலர் ரயிலை கவிழ்க்கும் நோக்கில் சிமெண்டால் ஆன ஸ்லாப் ஒன்றை, தண்டவாளத்தின் மீது வைத்துள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மின்சார ரயில் ஓட்டுநர் இதைப்பார்த்து ரயிலை நிறுத்திவிட்டார்.

சிமெண்ட் ஸ்லாப் வைக்கப்பட்டது குறித்து திருவான்மியூர் ரயில்வே போலீஸார் விசாரணை மேற்கொண்டனர், இந்நிலையில் சம்பவ இடத்தில் 2 கிலோ மீட்டர் நடந்துச் சென்று ரயில்வே கூடுதல் டிஜிபி சைலேந்திரபாபு ஆய்வு செய்தார். அவர் ஆய்வு செய்து சென்ற மறுநாளே செப்.4-ம் தேதி மீண்டும் தண்டவாளத்தில் சிமெண்ட் சிலாப்புகளை மர்ம நபர்கள் வைத்துள்ளனர்.

இம்முறை பெருங்குடி-தரமணி ரயில்நிலையங்களுக்கு இடையில் உள்ள தண்டவாளத்தில் சிமென்ட் ஸ்லாப்பை வைத்துவிட்டு சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் கடுமையாக ரோந்ந்துப்பணியில் ஈடுபட்டு சிமெண்ட் ஸ்லாப்பை தண்டவாளத்தில் வைப்பவர்களை தேடி வந்தனர். இந்நிலையில் தண்டவாளத்தில் சிமெண்ட் ஸ்லாப்பை வைத்த 3 ஐடிஐ மாணவர்களை போலீஸார் கைது செய்தனர்.

மூவரும் அடையாறு ஐடிஐயில் முதலாமாண்டு படிக்கும் மாணவர்கள். மூவரும் 18 வயதுக்குட்பட்டவர்கள் என்பதால் போலீஸார் பெயர்களை வெளியிடவில்லை. அவர்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.

மூன்று பேரும் கஞ்சா மற்றும் மதுபோதைக்கு அடிமையானவர்கள். அவர்கள் மது அருந்தவும், கஞ்சா புகைக்கவும் பணம் இல்லாததால் சிமெண்ட் ஸ்லாப்புகளில் உள்ள இரும்பு கம்பிகளை எடைக்கு போட்டால் பணம்கிடைக்கும் என்பதால் சிமெண்ட் ஸ்லாப்புகளை ரயில் தண்டவாளத்தில் வைத்தால் அது உடைந்துவிடும் அதன் பின்னர் அதில் உள்ள இரும்புக்கம்பிகளை எடைக்கு போட்டு மது, கஞ்சா வாங்க நினைத்ததாக கூறியுள்ளனர்.

சமீப காலமாக சென்னையில் நடக்கும் செயின்பறிப்பு, செல்போன் பறிப்பு குற்றச்செயல்களின் பின்னனியில் கஞ்சா, மது போதைப்பழக்கம் உள்ளதை சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டாக வைக்கின்றனர். இளம் வயதிலேயே மாணவர்கள் கஞ்சா மதுவுக்கு அடிமையாவதற்கு காரணம் எளிதில் பள்ளிக்கல்லூரிகளிலேயே அது கிடைப்பதுதான் காரணம் என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x