Published : 19 Sep 2018 09:21 AM
Last Updated : 19 Sep 2018 09:21 AM

வழக்குகள் நிலுவையில் இருப்பதால் ஸ்டெர்லைட் ஆய்வை தள்ளிவைக்க தமிழக மாசு கட்டுப்பாடு வாரியம் கடிதம்

நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் இருப்ப தால், ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வை தள்ளிவைக்குமாறு மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்துக்கு தமிழக மாசு கட்டுப்பாடு வாரிய உறுப்பினர் செயலர் கடிதம் எழுதியுள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீரின் தன்மையை மத்திய நீர்வள ஆணையம் சமீபத்தில் ஆய்வு செய்து, அறிக்கை அளித்தது. இதற்கு தமிழக அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்த சூழலில், மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் அமைத்த குழுவினர் ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்ய உள்ளது குறித்த தகவல் தமிழக மாசு கட்டுப்பாடு வாரியத்துக்கு தெரிவிக்கப்பட்டது. நீதிமன்ற வழக்குகளை சுட்டிக்காட்டி, குழுவின் வருகையை தள்ளி வைக்குமாறு தமிழக மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பெங்களூருவில் உள்ள மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய மண்டல இயக்குநருக்கு தமிழக மாசு கட்டுப்பாடு வாரிய உறுப்பினர் செயலர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் நியமித்த குழு தூத்துக்குடியில் உள்ள வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலை மற்றும் சென்னையில் செப்டம்பர் 22 முதல் 24-ம் தேதி வரை ஆய்வு செய்வது குறித்த தங்களது தகவல் செப்டம்பர் 17-ம் தேதி எங்களுக்கு கிடைத்தது.

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு விசாரணைக்கு உகந்ததுதானா என்பது குறித்து உச்ச நீதிமன்றத்திலும், தேசிய பசுமை தீர்ப்பாயத்திலும் தமிழக அரசு முறையீடு செய்துள்ளது.

சீராய்வு மனு தாக்கல்

அத்துடன், உச்ச நீதிமன்றத்தின் செப்டம்பர் 10-ம் தேதி உத்தரவு தொடர்பான சீராய்வு மனுவையும் தமிழக அரசு கடந்த 14-ம் தேதி தாக்கல் செய்துள்ளது.

இதுதவிர, தமிழக அரசாணையை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் செய்துள்ள மேல் முறையீடும் விசாரணைக்கு உகந்தது அல்ல என்று தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், குழுவின் ஆய்வுப் பணியை தள்ளிவைக்க வேண்டும். எனவே, குழுவின் ஆய்வை ரத்து செய்யலாம். அதுதொடர்பான தகவலை குழுவின் தலைவர், உறுப்பினர்களுக்கு தெரிவிக்கலாம்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட் டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x