Published : 29 Sep 2018 08:25 AM
Last Updated : 29 Sep 2018 08:25 AM

புதுமாப்பிள்ளை உயிரிழப்புக்கு காரணம் கழிவறை பிரச்சினையா?- மாவட்ட திட்ட அலுவலர் மறுப்பு; போலீஸார் விசாரணை தொடர்கிறது

‘சேலம் மாவட்டம் முழுவதும் அரசு மானியத்தில் 2.68 லட்சம் தனிநபர் கழிவறைகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன. வீட்டில் கழிவறை இல்லாததால் மணப்பெண் பிரிந்து சென்றதில், புதுமாப்பிள்ளை கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறுவது ஏற்புடையதல்ல’ என மாவட்ட திட்ட அலுவலர் அருள்ஜோதிஅரசன் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கோட்டகவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் சிவாஜி. இவருடைய மனைவி நல்லம்மாள்.  இவர்களது மகன் செல்லதுரை (26), சேலம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த தீபா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். வீட்டில் கழிவறை இல்லாததால் தீபா பிரிந்து சென்றதாகவும், இதனால், மனமுடைந்து செல்லதுரை கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டதாகவும் போலீஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

தமிழக அரசு தனிநபர் கழிவறை திட்டத்துக்கு மானியம் வழங்கி, திறந்த வெளிப்பகுதியை கழிப்பறையாக  பயன்படுத்தாத வகையில் திட்டங்களை வகுத்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், வீட்டில் கழிவறை இல்லாத காரணத்தால் மணப்பெண் பிரிந்து சென்றதும், கணவர் தற்கொலை செய்து கொண்டது குறித்தும் மாவட்ட திட்ட அலுவலர் அருள்ஜோதிஅரசனிடம் கேட்டபோது, ‘‘சேலம் மாவட்டத்தில் தனிநபர் கழிப்பிட திட்டம் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் கடந்த நான்கு ஆண்டுகளில் சுமார் 2.68 லட்சம் தனிநபர் கழிப்பறை, ரூ.12 ஆயிரம் மானிய உதவியுடன் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. திருமணமாகி ஒரு நாள் மட்டுமே கணவர் வீட்டில் தங்கிய மணப்பெண், கழிவறை இல்லாத காரணத்தைக் கூறி பிரிந்து செல்வதும், அதனால், கணவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறுவதும் ஏற்புடையதாக இல்லை என்பது என் கருத்து. செல்லதுரை வீட்டில் இருந்து 500 மீட்டர் தொலைவில் மேம்படுத்தப்பட்ட நவீன பொது சுகாதார வளாகம் அரசு கட்டியுள்ளது. இதில் ஐந்து குளியலறைகளும், ஏழு கழிப்பறை, மின்சார வசதி, தண்ணீர் வசதியுடன் உள்ளது.

விவாகரத்தானவர்

இதுபோல,  மாவட்டம் முழுவதும் 385 ஊராட்சிகளில் 492 பொதுசுகாதார வளாகங்கள் கட்டப்பட்டுள்ளன. தனி நபர் கழிவறை கோரி விண்ணப்பித்து, கழிவறைகட்டி முடித்ததும், சம்பந்தப்பட்ட வர்களின் வங்கி கணக்கில் உடனடியாக அரசு மானிய தொகை செலுத்தப்படுகிறது. எனவே, இந்த சம்பவத்தில் கழிவறையை பிரதானமாக காரணம் கூறுவது சரியல்ல. செல்லதுரை திருமணம் செய்துகொண்ட பெண் விவாகரத்தானவர், வயதில் மூத்தவர், வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள்,  காதலித்து திருமணம் செய்து கொண்டது என பல காரணங்கள் உள்ள நிலையில், மாவட்ட நிர்வாகத்தைக் குறைகூறும் நோக்கில், கழிவறை பிரச்சினையை பூதாகரமாக்கிவிட் டுள்ளனர்,’’ என்றார்.

இதுகுறித்து ஓமலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகதீஸ்வரன் கூறும்போது, ‘‘தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் செல்லதுரை வசிக்கும் கிராமத்தில் உள்ள 415 வீடுகளில், 252 வீடுகளில் தனிநபர் கழிவறை கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், தனிநபர் கழிவறை வேண்டி விண்ணப்பித்துள்ளவர்களுக்கு தனிநபர் கழிவறை கட்டுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த செல்லதுரை வீட்டில் குளியலறை உள்ளது. அவர்கள் கழிவறை கேட்டு அரசிடம் விண்ணப்பிக்கவில்லை’’ என்றார்.

புதுமணப்பெண் கழிவறை இல்லாததால் வீட்டை விட்டு வெளியேறியதால், செல்லதுரை கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு காரணம் உள்ளதா என்பது குறித்து ஓமலூர் போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x