Published : 18 Sep 2018 09:07 AM
Last Updated : 18 Sep 2018 09:07 AM

மாநகராட்சி இடத்தில் கொட்டப்படும் குப்பையால் பாதிப்பு

ராயபுரம் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கொட்டப்படும் குப்பையால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அவதிக்குள்ளாவதாக வாசகர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ராயபுரத்தை சேர்ந்த கே.சங்கர், ‘இந்து தமிழ்’ உங்கள் குரல் சேவையைத் தொடர்புகொண்டு கூறியதாவது:

சென்னை மாநகராட்சியின் 49-வது வார்டு, ராயபுரம், கல் மண்டபம் பகுதியில் உள்ள சோமுசெட்டி தெரு 4-வது சந்து அருகே மாநகராட்சிப் பள்ளி இயங்கி வந்தது.

அந்தப் பள்ளி கட்டிடம் அண்மையில் இடிக்கப்பட்டு, அந்த இடம் காலியாக உள்ளது. அந்த இடத்தில், அப்பகுதியை சுற்றி வசிக்கும் பொதுமக்கள் சிலர் சோஃபா, பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட மக்காத குப்பைகள், கட்டுமானக் கழிவுகள், அன்றாடம் உருவாகும் வீட்டு உணவு கழிவுகள் ஆகியவற்றை கொட்டி வருகின்றனர். இதை மாநகராட்சி நிர்வாகம் தடுப்பதில்லை. அதனால் அந்த காலி இடம் குப்பை மேடாகி அசுத்தமாக காட்சியளிக்கிறது. துர்நாற்றமும் வீசி வருகிரது.

மேலும் அந்த வளாகத்துக்கு வெளியில் கொட்டப்படும் கண்ணாடி பாட்டில்கள் போன்றவை வாகனங்கள செல்லும்போது உடைந்து போக்குவரத்துக்கு இடையூறாக தெருக்களில் கிடக்கின்றன. நடந்து செல்வோரும் அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது. அதனால் அதை சுற்றி வசிக்கும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே அப்பகுதியில் பொதுமக்கள் குப்பை கொட்டுவதை மாநகராட்சி நிர்வாகம் தடுக்க வேண்டும். ஏற்கெனவே அங்கு கொட்டப்பட்டுள்ள குப்பைகளை முறையாக அகற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, அந்த இடத்தில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இனிமேல் அங்கு பொதுமக்கள் குப்பை கொட்டுவது தடுக்கப்படும் என்றனர். 044-42890002

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x