Published : 02 Sep 2018 12:01 AM
Last Updated : 02 Sep 2018 12:01 AM

மு.க.ஸ்டாலின் தலைவரான பிறகு முதல்முறையாக திமுக மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்: செப். 8-ம் தேதி சென்னை கலைஞர் அரங்கில் நடக்கிறது

திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் வரும் 8-ம் தேதி நடைபெறவுள்ளது.

இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘‘திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் செப்டம்பர் 8-ம் தேதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெறும். கட்சியின் ஆக்கப் பணிகள் குறித்து ஆலோசிப்பதற்காக நடைபெறும் இந்தக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி காலமானார். அதனைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் திமுகவின் புதிய தலைவராக மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஸ்டாலின் வகித்து வந்த பொருளாளர் பதவிக்கு துரைமுருகன் தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் ஸ்டாலின் தலைவரான பிறகு முதல் முறையாக திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. திமுகவில் 65 மாவட்டச் செயலாளர்கள், 88 எம்.எல்.ஏ.க்கள், 4 எம்.பி.க்கள் உள்ளனர்.

ஓய்வின்றி உழைப்போம்

கடந்த 28-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் திமுக தலைவரான பிறகு பேசிய ஸ்டாலின், ‘‘நாடு முழுவதும் காவி வண்ணம் அடிக்கத் துடிக்கும் பிரதமர் மோடி அரசுக்கு பாடம் புகட்டுவோம். முதல்வர் பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசை வீழ்த்துவோம். இந்த இரண்டும்தான் திமுகவின் உடனடி இலக்கு. இதனை அடையும் வரை ஓய்வின்றி உழைப்போம்'' என்று அறைகூவல் விடுத்தார்.

புகழ் வணக்கக் கூட்டம்

கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி சென்னையில் நடைபெற்ற கருணாநிதி புகழ் வணக்க கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, மாநிலங்களவை திரிணாமூல் காங்கிரஸ் குழுத் தலைவர் டெரிக் ஓ பிரையன், இந்திய கம்யூனிஸ்ட் தேசியச் செயலாளர் டி.ராஜா உள்ளிட்டோர் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ள மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்தனர். மோடி அரசை வீழ்த்த ஸ்டாலின் உறுதியேற்க வேண்டும் என்று அனைவரும்  வேண்டுகோள் விடுத்தனர்.

வெளிப்படையான கருத்து

ஸ்டாலினுக்கு எதிராக களமிறங்கிய முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, ‘‘தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டால் ஸ்டாலின் தலைமையை ஏற்கத் தயார்'' என அறிவித்துள்ளார்.

தென் மாவட்டங்களில் அதிமுகவை வீழ்த்த அழகிரியை திமுகவில் இணைத்துக் கொள்ள வேண்டும் நாஞ்சில் சம்பத் போன்ற திமுக ஆதரவாளர்கள் வெளிப்படையாகவே கருத்து தெரிவித்துள்ளனர்.

இது போன்ற சூழலில் திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x