Published : 01 Sep 2018 07:36 PM
Last Updated : 01 Sep 2018 07:36 PM

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், விலாசம் மாற்றம் செய்ய சிறப்பு முகாம்கள்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

 

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், விலாசம் மாற்றம் குறித்து சென்னை மாநகராட்சி சிறப்பு முகாம்களை நடத்துகிறது. அது குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் ஜனவரி 01, 2019-ம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு 2019-ம் ஆண்டின் சிறப்பு சுருக்க முறை திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. மேற்படி வரைவு வாக்காளர் பட்டியல் பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் 4, 5, 6, 8, 10 மற்றும் 13 வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும்.

வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு, விலாசம் மாறுதல் செய்வது எப்படி?

பொதுமக்கள் தங்களது பெயர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் குறித்த விவரங்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனவா அல்லது இல்லையா என்பது குறித்து சரிபார்த்துக் கொள்ளலாம்.

* வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காமல் உள்ளவர்கள் மற்றும் ஜனவரி 01 2019 அன்று 18 வயது நிறைவு அடைகின்றவர்கள் ( 01.01.2001 ஆம் தேதிக்கு முன் பிறந்தவர்கள்) படிவம் 6–னை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும்.

* பெயர்கள் நீக்கம் தொடர்பாக படிவம் 7–னைப் பூர்த்தி செய்து அளிக்க வேண்டும்

* பட்டியலில் திருத்தம் தொடர்பாக படிவம் 8-னைப் பூர்த்தி செய்து அளிக்க வேண்டும்.

* சட்டப்பேரவை தொகுதிக்குள்ளேயே ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு குடிபெயர்ந்து புதிய வசிப்பிடத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 8-னைப் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.

எந்தெந்த தேதிகளில், எங்கு விண்ணப்பிக்கலாம்:

பெயர் சேர்ப்பு, நீக்கம், விலாசம் மாற்றம் போன்றவற்றிற்கான ஆவண ஆதார நகலினை இணைத்தும் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் / பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல அலுவலரின் அலுவலகத்தில் இன்று முதல் (01.09.2018) வரும் அக்டோபர் 31 வரை (31.10.2018) முடிய உள்ள காலத்திற்குள் விண்ணப்பிக்கலாம்.

சிறப்பு முகாம்கள்:

மேலும் செப்-09, செப்-23, அக்-07 மற்றும் அக்-14 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. அந்த நாட்களில் பொதுமக்கள் உரிய படிவங்களைப் பெறவும், பூர்த்தி செய்த படிவங்களை அளிக்கவும், இந்தச் சிறப்பு முகாம்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும் பொதுமக்கள் இணையதளம் மூலமாகவும் தங்களுடைய பெயர்கள் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம்.

(இணையதள முகவரி – www.elections.tn.gov.in ). விண்ணப்பங்களை வலைதளம் மூலமே மேற்கொள்ள வாக்காளர்கள் கோரப்படுகின்றனர்.

இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x