Published : 29 Sep 2018 09:15 AM
Last Updated : 29 Sep 2018 09:15 AM

"ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிப்பதில் பிரச்சினை ஏற்படும்"- ஐயப்பா சேவா சங்கச் செயலாளர் ஐயப்பன் கருத்து

‘சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண், பெண் பாகுபாடு கிடையாது. அனைத்து வயதுப் பெண்களும் அங்கு வந்து வழிபாடு நடத்தலாம்’ என உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது. இதையடுத்து, ‘சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு என்று பாரம்பரியம் இருக்கிறது, அதை மறந்துவிடாதீர்கள்’ என்று சபரிமலையின் தலைமை தந்திரியும் பந்தள அரச குடும்பத்தினரும் அதிருப்தி தெரிவித்தனர்.

இந்நிலையில், சபரிமலையில் ஐயப்ப பக்தர்களுக்கு உணவு,மருத்துவம் உள்ளிட்ட அனைத்துவிதமான சேவைகளையும் செய்து வரும் அகில பாரத ஐயப்பா சேவா சங்கமும் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள இந்தத் தீர்ப்பு நாங்கள் எதிர்பார்க்காத ஒன்று என கருத்துத் தெரிவித்திருக்கிறது.

இதுகுறித்து அச்சங்கத்தின் தமிழ் மாநிலச் செயலாளர் கே. ஐயப்பன் நம்மிடம் பேசும்போது, “சபரிமலை தேவசம் போர்டுடன் எங்களையும் இந்த வழக்கில் சேர்த்துக்கொண்டு, உச்ச நீதிமன்றத்தில் எங்கள் தரப்பு வாதங்களை எடுத்து வைத்தோம். எங்களுக்காக டெல்லி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ராமமூர்த்தி உச்ச நீதிமன்றத்தில் வாதாடினார்.

சபரிமலை வழிபாட்டுக்கு என ஒரு பாரம்பரிய, ஆகம முறை இருக்கிறது. எக்காரணம் கொண்டும் அதைச் சிதைக்கக் கூடாது என்பது எங்களது எண்ணம். சபரிமலையில் எந்தவொரு சிறு மாற்றத்தை செய்வதாக இருந்தாலும் தேவ பிரசன்னம் பார்க்காமல் செய்ய மாட்டார்கள். பிரசன்னம் என்பது குறி கேட்பது அல்ல; தந்திரிகளும் மேல்சாந்தி உள்ளிட்டவர்களும் சந்நிதான வளாகத்தில் அமர்ந்து குறிப்பிட்ட அந்த விஷயம் பற்றி விவாதிப்பார்கள். அதில் மாற்றுக் கருத்துகள் அதிக அளவில் வந்தால் அந்த மாற்றத்தை அமல்படுத்த மாட்டார்கள். வழியில் ஒரு மரத்தை வெட்டுவதாக இருந்தால்கூட இப்படித்தான் முடிவெடுப்பார்கள்.

அப்படியிருக்கும்போது, இப்போது நீதிமன்றம் மூலமாக ஒரு முடிவு திணிக்கப்பட்டிருக்கிறது. இதை அமல்படுத்துவது குறித்து தேவசம் போர்டு என்ன முடிவு எடுக்கப் போகிறது என்று தெரியவில்லை. ஆனால், நீதிமன்ற உத்தரவு அமல்படுத்தப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் ஏகப்பட்ட பிரச்சினைகள் ஏற்படும். பெண்களுக்கான அடிப்படை வசதிகள், தரிசனத்துக்கு தனி வரிசை உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டிய கட்டாயம் தேவசம் போர்டுக்கு ஏற்படும்.

பக்தர்களுக்கு வழியில் ஏதாவது உடல் நலக் கோளாறு ஏற்பட்டால் அவர்களை ஸ்ட்ரெச்சரில் வைத்து முதலுதவி சிகிச்சை மையத்துக்கு 4 ஆண்கள் தூக்கிச் சென்றுவிடுவார்கள். பெண்கள் அனுமதிக்கப்பட்டால் அப்படி எளிதில் எதுவும் செய்ய முடியாது. அதற்காக பெண் சேவகர்களை நாங்கள் வேலைக்கு அமர்த்த வேண்டி வரும். ஆண்களைப் போல பெண்களை சேவைசெய்ய வாரக் கணக்கில் சபரிமலையில் தங்கவைப்பது இயலாத காரியம்” என்றார்.

நீதிமன்றத் தீர்ப்பு ஐயப்ப பக்தர்களிடம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று அவரிடம் கேள்வி எழுப்பியதற்கு, “காலையில் இருந்து என்னிடம் தொலைபேசி வழியாக பலரும் இதுகுறித்து பேசிக்கொண்டே இருக்கிறார்கள். ஒரு சிலர், ‘இனிமேலும் நாங்களெல்லாம் சபரிமலைக்குப் போக வேண்டுமா என்று யோசிக்கிறோம்’ என்கிறார்கள். இதனால் சபரி மலைக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நிச்சயம் நாளுக்கு நாள் குறையும். அந்த அளவுக்கு ஐயப்ப பக்தர்களின் உணர்வுகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயம். இன்னும் போகப் போக எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரியவில்லை” என்றார் ஐயப்பன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x