Published : 22 Sep 2014 11:37 AM
Last Updated : 22 Sep 2014 11:37 AM

பாரத், ஹெச்.பி.யில் விரைவு விநியோகம்: இண்டேன் சிலிண்டர்கள் மட்டும் 4 வாரம் கழித்து டெலிவரி - வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்தி

பாரத், ஹெச்.பி. காஸ் சிலிண்டர்கள் பதிவு செய்த நாளில் இருந்து ஒரு வாரத்துக்குள் கிடைத்துவிடும் நிலையில், இண்டேன் சமையல் காஸ் சிலிண்டர் 28 நாட்களுக்குப் பிறகு டெலிவரி செய்யப்படுவது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மக்களுக்கு மானிய விலையில் சமையல் காஸ் சிலிண்டர்களை இண்டேன், பாரத், ஹெச்.பி. ஆகிய 3 மத்திய பொதுத் துறை நிறுவனங்கள் விநியோகம் செய்துவருகின்றன. ‘இண்டேன்’ சமையல் சிலிண்டர்களை இந்தியன் ஆயில் நிறுவனம் விற்பனை செய்கிறது.

இண்டேன் நிறுவனத்தில் சிலிண்டர்கள் தரம் சரிபார்ப்புப் பணி சில மாதங்களுக்கு முன்பு நடந்தது. காலாவதியான சிலிண்டர்கள் திரும்பப் பெறப்பட்டதால் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டது. சிலிண்டர்கள் தாமதமாக விநி யோகிக்கப்பட்டதால் வாடிக்கை யாளர்கள் அவதியடைந்தனர்.

இந்த சிக்கல் தற்போது சரியாகிவிட்டது. ஆனாலும், சிலிண்டர் பதிவு செய்ததில் இருந்து குறைந்தபட்சம் 21 முதல் 28 நாட்கள் கழித்தே சிலிண்டர் டெலிவரி செய்யப்படுகிறது. இந்த கால இடைவெளி அதிகரித்துக் கொண்டே போகிறது. முன்பெல் லாம் பதிவு செய்ததில் இருந்து ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்குள் சிலிண்டர் டெலிவரி செய்யப்பட்டு வந்தது. இது 2 வாரம், 3 வாரம் என்று அதிகரித்து தற்போது 4 வாரத்தை எட்டியுள்ளது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அதே நேரம், பாரத் காஸ், ஹெச்.பி. காஸ் சிலிண்டர்கள் வரத்து அதிகம் இருப்பதால், பதிவு செய்ததில் இருந்து 2 நாட்கள் முதல் 1 வாரத்துக்குள் கிடைத்துவிடுகிறது.

இதுகுறித்து இண்டேன் காஸ் ஏஜென்சி நிர்வாகிகளிடம் கேட்டபோது, ‘‘சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய இடங்களுக்கு தினமும் 320 லோடு இண்டேன் சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. பல வாடிக்கையாளர்கள் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடும் என்று நினைத்து அதிக அளவில் சிலிண்டர் புக் செய்துவிடுகின்றனர். இதனால், தேவை உள்ளவர்களுக்கு கிடைப்பது தாமதமாகிறது. பதிவு செய்ததில் இருந்து 10 நாட்களுக்குள் நுகர்வோருக்கு சிலிண்டர் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x