

தனது குழந்தைக்கு மொட்டையடித்து காதுகுத்து நிகழ்ச்சிக்காக கோவிலுக்கு சென்ற தொழிலதிபர் வீட்டின் கதவை உடைத்து 30 சவரன் நகை, ரூ 1.5 லட்சம் ரொக்கம் கொள்ளை அடிக்கப்பட்டது.
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள சுரேஷ் நகரில் வசிப்பவர் கோபிநாத்(45). இவருக்கு திருமணமாகி சாய்ப்பிரியா (38) என்ற மனைவியும் மகனும் உள்ளனர். இவர் சொந்தமாக துணிக்கடை நடத்தி வருகிறார். மயிலாப்பூர் மற்றும் காஞ்சிபுரம் பகுதியில் இவருக்கு கடைகள் உள்ளது.. இவர்களது மகனுக்கு மொட்டை அடித்து காது குத்தும் வேண்டுதல் இருந்தது. நிகழ்ச்சியை காஞ்சிபுரத்தில் உள்ள கோவிலில் நடத்த முடிவு செய்தனர்.
இதற்காக கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வீட்டை பூட்டி விட்டு காஞ்சிபுரம் கிளம்பி சென்றனர். காதுகுத்து நிகழ்ச்சியை முடித்துவிட்டு இன்று காலை அனைவரும் சென்னை திரும்பினர். வீட்டுக்கு வந்த அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அவர்களது வீட்டின் முன்பக்க க்ரில் கதவு பூட்டை உடைத்து உள்ளே அமைந்திருந்த பிரதான பெரிய மரக்கதவின் லாக்கை கடப்பாரை போன்ற ஆயுதத்தால் நெம்பி உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் வீட்டில் பீரோவில் இருந்த 30 சவரன் நகை, இரண்டு விலை உயர்ந்த செல்போன்கள், ரூ.1.50 லட்சம் ரொக்கப்பணத்தை எடுத்துச் சென்றுள்ளனர்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த கோபிநாத் இது குறித்து வளசரவாக்கம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். சமபவ இடத்திற்கு வந்த போலீஸார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் விசாரணை நடத்தி தடயங்களை சேகரித்தனர்.
கோபிநாத் குடியிருப்பது அடுக்குமாடி குடியிருப்பு. குடியிருப்பு மொத்தத்திற்கும் காவலாளி ஒருவர் பணியில் இருக்கிறார். ஆனால் அவரை மீறி கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது. இதில் காவலாளிக்கு தொடர்பு உள்ளதா என போலீஸார் சந்தேகிக்கின்றனர். காரணம் ஊருக்கு செல்வதற்கு முன்பு காவலாளியிடம் வீட்டில் நகைகள் இருப்பதாக கூறி விட்டு கோபிநாத் குடும்பத்தினர் சென்றுள்ளனர்.
வீட்டில் நகைகள் இருக்கிறது என்ற தகவலால் ஆசைப்பட்ட காவலாளியே ஆட்களை வைத்து கொள்ளைச்சம்பவத்தில் ஈடுபட்டாரா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். குடியிருப்பில் கண்காணிப்பு கேமரா எதுவும் இல்லை. அக்கம் பக்கத்தில் எதாவது உள்ளதா? என போலீஸார் தேடி வருகின்றனர்.
போலீஸார் என்னதான் எச்சரித்தாலும் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் வெளியே செல்லும்போது நகைப்பணத்தை வங்கி லாக்கரில் வைக்காமல் போனதும், அருகில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் சொல்லாமல் போனதும், வீட்டில் சிசிடிவி கேமரா பொருத்தாததும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்க காரணம் என போலீஸார் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் வளசரவாக்கம் சுரேஷ் நகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.