Published : 20 Sep 2018 10:02 AM
Last Updated : 20 Sep 2018 10:02 AM

5 நாட்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கும் வகையில் சென்னையில் வெள்ள அபாயத்தை கணிக்கும் புதிய தொழில்நுட்ப அமைப்பு அறிமுகம்: வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்

சென்னையில் 5 நாட்களுக்கு முன்னரே வெள்ள முன்னெச்சரிக்கை வழங்கும் வகையிலான புதிய தொழில்நுட்ப அமைப்பு வருவாய்த்துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக வரு வாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதய குமார் தெரிவித்தார்.

இது தொடர்பாக, அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: வங்கக் கடலின் கிழக்கில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த சூழலில் சென்னை வெள்ள முன்னெச்சரிக்கை வழங்கும் வகையிலான புதிய தொழில்நுட்ப அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இது சென்னை பெருநகர வெள்ள அபாய மேலாண்மையில் சரியான நடவடிக்கை, முடிவுகள் எடுக்க உதவி புரியும்.

இந்த அமைப்பை தேசிய கடலோர ஆராய்ச்சி மையம், ஐஐடி சென்னை மற்றும் மும்பை, அண்ணா பல்கலைக்கழகத்தின் தொலை உணர்வு நிறுவனம் ஆகியவை கூட்டாக வடிவமைத்துள்ளன. இந்த அமைப்பு, சென்னையில் ஏற்படும் வெள்ள அபாய நிலை, மழையளவு, கடல் அலை வேகம், ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீ்ர அளவுகள் மற்றும் இதர புள்ளி விவரங்கள் அடிப்படையில் நீரியக்க விசை சார்ந்த தொழில்நுட்பம் மூலம் கணிக்கும்.

இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தின் அதிநவீன முன்னறிவிப்பு கருவிகளின் துணையுடன், 5 நாட்களுக்கு முன்னரே வெள்ள அபாயம், பாதிக்கப்படும் இடங்கள் உள்ளிட்ட விவரங்களை இந்த அமைப்பின் மூலம் கண்டறிய முடியும். இதனால் அபாய காலங்களில் ஏற்படும் ஆபத்துக்களை குறைக்கலாம். பாதிக்கப்படும் மக்கள் மற்றும் சொத்துகளை பாதுகாக்கவும் நிவாரண பணிகளை மேற்கொள்வும் உதவியாக இருக்கும்.

இந்த அமைப்பு நடப்பாண்டின் வடகிழக்கு பருவமழை காலங் களில் ‘டிஎன் ஸ்மார்ட்’ இணைய தள அமைப்புடன் இணைந்து பரிசோதனை மேற்கொள்ளப்படு கிறது. இதன் மூலம் பெறப் படும் முன்னெச்சரிக்கை தகவல் கள் வருவாய்த்துறை அலுவலர் களுக்கு ‘டிஎன் ஸ்மார்ட்’ மூலம் வழங்கப்படும்.

வருவாய் நிர்வாக ஆணையரின் கீழ் இயங்கும், ‘இன்சிடென்ட் ரெஸ்பான்ஸ் திட்டம்’ மூலம் அனைத்து அலுவலர்களும் சென்னை வெள்ள முன்னெச்சரிக்கை அமைப்பை பயன்படுத்துவார்கள்.

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், வருவாய் நிர்வாக ஆணையர் கே.சத்யகோபால் மற்றும் தேசிய கடலோர ஆராய்ச்சி மைய இயக்குநர் எம்.வி.ரமணமூர்த்தி ஆகியோர் இடையில் கையெழுத்தானது. மேலும், வெள்ள காலங்களில், வரும் மனுக்களை வருவாய் நிர்வாக ஆணையர் கண்காணிக்கும் வகையிலும் அந்த மனுக்களை துரிதப்படுத்தவும் தேசிய தகவல் மையம் உதவியுடன் புதிய வலைதள பயன்பாடு (http://gdp.tn.gov.in) உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெறப்படும் மனுக்கள், வலைதள பயன்பாட்டின் மூலம், மாவட்ட ஆட்சியர் மற்றும் இதர அலுவலர்களுக்கு உரிய நடவடிக்கைக்காக அனுப்பப்படும். குறுஞ்செய்தி மூலம் உடனடியாக ஒப்புதல் வழங்கப்படும்.

எனவே, வரும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள நாம் தயாராக உள்ளோம். காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து நீர் நிலைகளும் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x