கோவை குண்டு வெடிப்பு வழக்கில் 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் சென்னையில் கைது: நீதிமன்றத்தில் ஆஜராகி சிறையில் அடைப்பு
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் சென்னையில் கைது செய்யப்பட்டார். கோவை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவையில் 1998-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் 51 பேர் உயிரிழந்தனர், 117-க்கும் மேற்பட்டோர் படுகாய மடைந்தனர்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த கோவை பெரியகடை வீதி போலீஸார், 157 பேரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இவர்கள் மீது வெடிபொருள் உபகரணச் சட்டம் - 1908, ஆயுதச் சட்டம் - 1959, பொது சொத்துகளை சேதப்படுத்தும் சட்டம் - 1992 உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக, மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் பண்ணியங்காரா கிராமம் திருவன்னுவைச் சேர்ந்த நூகு ரஷீத்(எ) மாங்காவு ரஷீத் (41) என்பவருக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவரை போலீஸார் தீவிரமாகத் தேடி வந்தனர்.
குண்டு வைத்தவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக, கூட்டுச் சதி, ஆயுதச் சட்டத்தின் கீழ் 1998-ல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதையறிந்து தலைமறை வாக இருந்த நூகு ரஷீத், வெளிநாட்டுக்குத் தப்பியோடி விட்டார். சமீபத்தில் நூகு ரஷீத் வெளிநாட்டில் இருந்து சென்னைக்கு வருவதாகவும், அங்கிருந்து கேரளா மாநிலம் கோழிக்கோடு வழியாக தனது சொந்த ஊருக்கு செல்ல இருப்பதாகவும் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
விமான நிலையத்தில் கைது
இதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் சிபிசிஐடி சிறப்புப் புலனாய்வுப் பிரிவு போலீஸார், நேற்று முன்தினம் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கோவை குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்பு உடையதாகத் தேடப்பட்டு வந்த நூகு ரஷீதை அடையாளம் கண்டு கைது செய்தனர். கத்தார் நாட்டில் இருந்து சென்னை வந்தபோது பிடிபட்ட அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
சென்னையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் அவரை அழைத்து வந்த சிபிசிஐடி சிறப்பு புலனாய்வுப் பிரிவு போலீஸார், கோவை ஜே.எம். 5 நீதிமன்றத்தில் நேற்று ஆஜர் படுத்தினர்.
வழக்கை விசாரித்த நீதிபதி இனியா கருணாகரன், 24-ம் தேதி வரை நூகு ரஷீதை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, கோவை மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.
