Published : 12 Sep 2018 11:01 AM
Last Updated : 12 Sep 2018 11:01 AM

மணப்பெண் கிடைத்தும் மீண்டும் நின்றது பவானிசாகர் எம்எல்ஏ திருமணம்

பவானிசாகர் எம்.எல்.ஏ ஈஸ்வரனை மணக்கவிருந்த பெண் கடந்த செப்.1 அன்று மாயமானார். வயது வித்யாசத்தை காரணம் காட்டி மணமகள் மறுத்ததால் திருமணம் நின்றது. வேறு பெண்ணை நிச்சயித்து அதே தேதியில் நடக்கவிருந்த திருமணமும் நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஈஸ்வரன் (43). இவர் தற்போது அதிமுக பவானிசாகர் ஒன்றிய மாணவர் அணி செயலாளராக உள்ளார். ஈஸ்வரனின் சொந்த ஊர் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள உஜ்ஜங்கனூர் ஆகும்.

சமீபத்தில் எம்.எல்.ஏ ஈஸ்வரனுக்கும் கோபி அருகே உள்ள உக்கரத்தை சேர்ந்த ரத்தினசாமி என்பவரது மகள் சந்தியா (23) என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மணமகள் சந்தியா எம்.சி.ஏ. பட்டதாரி ஆவார். இருவருக்கும் 20 ஆண்டுகள் வயது வித்தியாசம் உள்ள நிலையில் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

செப்டம்பர் 12 அன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி மாரியம்மன் கோயிலில் திருமணம் நடப்பதாக இருந்தது. இதற்கான திருமண ஏற்பாடு தடபுடலாக நடந்து வந்தது.

திருமண பத்திரிகை அச்சடிக்கப்பட்டு உறவினர்களுக்கு கொடுக்கப்பட்டு வந்தது. திருமணத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள், எம்.பி, எம்எல்ஏக்கள் கலந்து கொள்வதாக இருந்தது.

ஊரெங்கும் பிளக்ஸ் பேனர்கள் வைத்து தடபுடலாக திருமண வேலை நடந்துவந்த வேளையில் கடந்த 1-ம் தேதி மணமகள் சந்தியா மாயமானார்.

மணமகள் காணாமல் போனது குறித்து சந்தியாவின் தந்தை ரத்தினசாமி கடத்தூர் போலீஸில் புகார் அளித்தார். எம்எல்ஏ மணக்கவிருந்த பெண் மாயமானது பவானிசாகரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

போலீஸார் தேடியதில் மாயமான மணப்பெண் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஒரு கிராமத்தில் இருந்ததை கண்டுபிடித்து மீட்டனர். அவரை கோபிச்செட்டிபாளையம் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

நீதிமன்ற நடுவர் பாரதி பிரபாவிடம் மணப்பெண் சந்தியா, “எனக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை. எனக்கும் எம்.எல்.ஏ., ஈஸ்வரனுக்கும் 20 வயது வித்தியாசம் உள்ளது. என் தந்தை வயது உள்ளவரை நான் எப்படி திருமணம் செய்வேன்? அதனால் வேறு வழியில்லாமல் வீட்டைவிட்டு வெளியேறினேன்.” என்று தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, நீதிமன்ற நடுவர் யாரும் மணப்பெண் சந்தியாவை எந்த விதமான தொந்தரவும் செய்யக்கூடாது என எச்சரித்து அனுப்பி வைத்தார்.

சந்தியா- ஈஸ்வரன் திருமணம் நின்றது. ஆனால் அதே தேதியில் வேறு மணப்பெண்ணை நிச்சயித்து திருமணம் செய்ய எம்.எல்.ஏ தரப்பில் கடும் முயற்சி செய்தனர்.

முதல்வர், துணை முதல்வர் தலைமையில் திருமணம் என்பதால் அதே தேதியில் வேறு மணப்பெண்ணை நிச்சயித்து திருமணம் செய்ய முடிவெடுத்தனர். இதனால் பண்ணாரி அம்மன் கோவிலில் போடப்பட்ட பந்தலையும் பிரிக்கவில்லை. அன்று அதே கோயில் பந்தலில் முதல்வர் எடப்பாடிக்கு மூன்று நிகழ்ச்சிகள் இருந்தன.

ஆனால் மணமகளை பார்த்து நிச்சயித்துவிட்டாலும் மணமகள் வீட்டார் தரப்பில் செப். 12 தேதியான இன்று திருமணத்திற்குத் தயாராக இல்லை. ஐப்பசி மாதத்தில் திருமணம் செய்ய உத்தேசித்ததால் இன்றைய திருமணம் தள்ளிவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று எம்.எல்.ஏ திருமணம், பண்ணாரி அம்மன் கோயில் ராஜகோபுரம் அடிக்கல் நாட்டு விழா, அதிரடிப்படை முகாம் அலுவலகம் திறப்பு விழா என மூன்று நிகழ்ச்சிகள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறுவதாக இருந்தன. இதற்காக சிறப்பு அலங்காரத்துடன் பந்தல் போடப்பட்டது. ஆனால் எம்எல்ஏ திருமணம் நின்றுவிட்டதால், மற்ற நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x