Published : 17 Sep 2018 03:18 PM
Last Updated : 17 Sep 2018 03:18 PM

சென்னையில் 3-வது கருணைக் கொலை; பார்வையற்ற 13 வயது மகனைக் கொன்ற தாய்: கடைசி நேரத்தில் மனம் மாறிக் காப்பாற்ற முயன்றும் உயிரிழப்பு

ஆலந்தூரில் பார்வையற்ற 13 வயது மகனைப் பராமரிக்க முடியாமல் விரக்தியில் தனது கைகளாலேயே கருணைக் கொலை செய்த தாய் கைது செய்யப்பட்டார். கொலையை மறைக்க முயன்ற அவர் பிரேதப் பரிசோதனையில் சிக்கினார்.

குழந்தைகளை ஆசை ஆசையாய் வளர்க்க நினைக்கும் பெற்றோர் அதே குழந்தைகள் உடல் நலம் பாதிக்கப்பட்டு வாழ்நாள் முழுவதும் கண்ணெதிரில் துயரப்படுவதை காணச் சகிக்காமல் கருணைக் கொலை செய்கின்றனர். வாழ்வதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமை உள்ளபோது இவ்வாறு செய்வதை மனிதத் தன்மையுள்ள யாரும் அனுமதிக்க மாட்டார்கள்.

மாற்றுத்திறனாளிக் குழந்தைகளைப் பராமரிக்க முடியாமல் பெற்றோரே கொலை செய்த சம்பவம் சென்னையில் இதற்கு முன்னர் சமீப காலங்களில் இரண்டு இடத்தில் நடந்துள்ளது. இரண்டிலும் தந்தையே கொலையாளியாக இருந்த நிலையில் ஆலந்தூரில் 3-வது கருணைக்கொலை நடந்துள்ளது. இதில் தாயார் மகனைக் கொன்ற சோகம் நிகழ்ந்துள்ளது.

சென்னை ஆலந்தூர் பட்ரோடு, நஷ்ரத்புரத்தில் வசிப்பவர் பத்மா (34). இவருக்குத் திருமணமாகி பரத் என்கிற மகன் உள்ளார். குழந்தை பரத் கண்பார்வை இல்லாமல் பிறந்ததால் மகனுக்குச் சிகிச்சை செய்தும் பார்வை வராத நிலையில் ஏற்பட்ட பிரச்சினையில், 10 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி பத்மாவை விட்டுப் பிரிந்து சென்றார் கணவர்.

கணவரைப் பிரிந்து வாழ்ந்த பத்மாவுக்கு பார்வையற்ற மகனைப் பராமரிக்கும் பணியும், குடும்பத்துக்கு வருமானம் ஈட்டும் பணியும் ஒருசேரத் தலையில் விழுந்தது. இதனால் போதிய வருமானம் இல்லாததால் மகன் பரத்தை வளர்க்க வழி தெரியாமலும் தவித்துள்ளார் பத்மா. அடையாரில் உள்ள பார்வையற்றோர் பள்ளியில் மகனைப் படிக்க வைத்துள்ளார்.

தான் வளர்ந்து தனது தாயாரை நன்றாகக் காப்பாற்றுவதாக பரத் அடிக்கடி தாயாரிடம் கூறுவது உண்டாம். மகனின் பேச்சைக்கேட்டு பத்மா கண் கலங்குவாராம். பார்வையற்ற மகனைப் படிக்கவைத்து வாழ வைத்தால் நல்ல வாழ்க்கை அமைய வாய்ப்புண்டு. ஆனால் அதுபற்றி பத்மாவுக்குத் தெரியவில்லை, யாரும் உதவவில்லை.

சில வேளைகளில் மகனுக்கு உணவு கொடுக்கக்கூட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மகனின் பரிதாப நிலையைப் பார்த்தும் வறுமை நிலையை நினைத்தும்  பத்மா விரக்தியில் இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று தனது மகன் பரத்துக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகக் கூறி, அருகில் இருந்த மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார் பத்மா. ஆனால் பரத்தைச் பரிசோதித்த மருத்துவர்கள் அவன் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதைக்கேட்டு பத்மா கதறி அழுதுள்ளார்.

சிறுவனின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர். போலீஸாரும் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் சிறுவன் பரத் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து பரங்கிமலை போலீஸார், பத்மாவிடம் விசாரணை நடத்தினர். முதலில் மறுத்த அவர் பின்னர் உண்மையை ஒப்புக்கொண்டார்.

''மகனின் நிலையைப்பார்த்து தினம் தினம் துக்கத்தில் வாடிய நான், ஆதரிக்க யாருமின்றி மகனை மட்டும் வைத்துக்கொண்டு அவனது நிலையையும் பார்த்து விரக்தியடைந்தேன்.

மகனைக் கொன்றுவிட்டு நானும் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தேன். பிளாஸ்டிக் பேப்பரால் மகனின் முகத்தை மூடி மூச்சுத்திணற வைத்தேன். அவன் திமிறினான், மயக்கமடைந்தான். உயிர் போகாததால் அழுதபடி நானே என் மகனை கழுத்தை நெரித்தேன். அவன் இருமினான். என்னால் அதைப் பார்க்க முடியவில்லை.

எனது தற்கொலை எண்ணத்தை கைவிட்டு அவனைக் காப்பாற்றத் துடித்தேன். மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றேன். மூச்சுத்திணறல் என அனுமதித்தேன். ஆனால் வழியிலேயே என் மகன் உயிர் பிரிந்தது தெரிந்தது. கதறி அழுதேன். எனது நிலை யாருக்கும் வரக்கூடாது'' என்று பத்மா போலீஸ் விசாரணையில் கூறியுள்ளார்.

மகனைக் கொன்றதாக பத்மாவை போலீஸார் கைது செய்தனர். இதற்கு முன்னர் கடந்த ஆண்டு இதே செப்டம்பர் மாதம் கோயம்பேட்டைச் சேர்ந்த ஆதிகேசவன் (48) என்கிற ஆட்டோ ஓட்டுநர் மனநலம் பாதிக்கப்பட்ட தனது மகளைப் பராமரிக்க முடியாமல் கருணைக் கொலை செய்தார். கடந்த ஜூன் மாதம் திருவொற்றியூரில் நவாசுதீன்(49) என்ற தந்தை 21 வயது மனநலம் பாதிக்கப்பட்ட மகனைப் பராமரிக்கமுடியாமல் கருணைக் கொலை செய்தார். தற்போது பத்மா தனது மகனைக் கொன்றது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பார்வையற்ற குறைபாட்டை வென்று சாதித்த பலர் உள்ளனர். பல்கலைக்கழக பேராசிரியர்களாக, ஆசிரியர்களாக பல்வேறு துறைகளில் பரிணமளிக்கின்றனர். சமீபத்தில் கேரளாவில் பார்வையற்ற மாணவி ஐஏஎஸ் தேர்வில் வென்றார். பார்வைத்திறன் குறைப்பாட்டை வென்றவர்கள் மத்தியில் மகனை வளர்த்து ஆளாக்கி இருக்க வேண்டும். அவருக்கு சமூகமும் உதவி செய்திருக்க வேண்டும். அதற்கான வசதிகள் கிடைக்காத போது இப்படிப்பட்ட சோகங்கள் நடக்கிறது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x