Last Updated : 08 Sep, 2018 09:15 AM

 

Published : 08 Sep 2018 09:15 AM
Last Updated : 08 Sep 2018 09:15 AM

அழிந்துபோன கிராமம்; அழியாத வரலாற்றுத் தடயங்கள்

மதுரை - விருதுநகர் மாவட்ட எல்லைப் பகுதியில் அழிந்துபோன கிராமத்தில் இன்றும் அழியாத பல வரலாற்று எச்சங்கள் கண் டெடுக்கப்பட்டுள்ளன.

கற்களுக்கு என்ன வரலாறு என்பர் சிலர். ஆனால், கற்களே ஒரு கிராமத்தின் வரலாற்றை கூறும் வகையில் கண்டெடுக்கப்பட் டுள்ளது. மதுரை - விருதுநகர் மாவட்ட எல்லைப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள டி.கல்லுப்பட்டி அருகே உள்ள வேளாம்பூர் கிராமம். கி.பி.17-18-ம் நூற்றாண்டுகளில் வேளாண்மையில் செழித்து வேளாம்பூர் என அழைக்கப்பட்ட இக்கிராமம் இன்று மண்மேடாகிக் கிடக்கிறது. இங்கு வாழ்ந்த மக்கள் விட்டுச் சென்ற தடயங்கள் மட்டுமே இன்று காணப்படுகின்றன. ஆனால், அரசு பதிவேடுகளில் இன்றும் வேளாம்பூர் ஊராட்சி என்ற பெயரிலேயே பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருவது குறிப் பிடத்தக்கது.

வரலாற்றுத் தகவல்கள்

விவசாய அழிவு, பருவமழை குறைவு, கொள்ளை நோய்கள், உணவுப் பஞ்சம் என பல கார ணங்கள் இக்கிராமத்தின் அழி வுக்கு சொல்லப்பட்டாலும், வேளாம் பூரைப் பற்றித் தெரிந்திருக்கும் பெரியோர்களிடம் அதிக தாக்கத் துடன் உள்ளது செவிவழிச் செய்தி மட்டுமே. சதுரகிரி மலையில் இருந்து சித்தர் ஒருவர் இவ்வழியே வந்தபோது வேளாம்பூரில் வீட்டில் ஒரு பெண்ணிடம் தண்ணீரும் சுண்ணாம்பும் கேட்டதாகவும் அப்பெண் கொடுக்க மறுத்ததால் சித்தரின் சாபத்தால் இவ்வூர் அழிந்ததாகவும் செவிவழித் தகவல்கள் கூறுகின்றன.

இந்நிலையில், பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளா் து.முனீஸ்வரன் மற்றும் அருப்புக்கோட்டையில் உள்ள அரசு உதவிபெறும் கல்லூரியின் வரலாற்றுத் துறைப் பேராசிரியா் சி.செல்லப்பாண்டியன் ஆகியோர் வேளாம்பூரில் களஆய்வு மேற் கொண்டபோது பல வரலாற்றுத் தகவல்கள் கிடைத்துள்ளன.

இதுகுறித்து அவர்கள் கூறியது: வேளாம்பூரில் கள ஆய்வு மேற் கொண்டபோது, இங்கிருந்த மக்க ளிடம் பெருந்தெய்வ வழிபாடு மற்றும் நடுகல் வழிபாடு வழக் கில் இருந்த சான்றுகள் கிடைத் தன. குடியிருப்புகள் இல்லாத நிலையிலும், இங்கு ஒரு பெரு மாள் கோயில் உள்ளது. 17-ம் நூற்றாண்டைச் சோ்ந்த நடுகல் ஒன்றும் கண்டறியப்பட்டது. ஒரு குதிரை வீரன் போருக்கு செல்வது போன்றும், அவன் பின்னால் ஒரு பெண் வாளுடன் செல்லும் காட்சியும் இடம் பெற்றுள்ளது.

அத்துடன் குதிரை வீரன் முன்னே 2 பெண்கள் அமா்ந்திருக்கும் சிலையும் காணப்படுகிறது. இவர் வேளாம்பூர் கிராமத்தின் ஊர்த் தலைவனாக இருந்திருக்கலாம். இவா் இறந்த பின்னா் அடக்கம் செய்யப்பட்டு சிலை வடிவமைத்து மக்களால் வழிபடப்பட்டிருக்கலாம். இவை தவிர, தன் கற்பை காப்பாற்ற குழந்தையுடன் தன்னைத் தானே அழித்துக் கொண்ட ஒரு பெண்ணின் சிலை குழந்தையுடனும், கையில் எலுமிச்சம்பழத்துடனும் காணப்படு கிறது. இப்பெண் மக்களால் பத் தினிக் கடவுளாக வழங்கப்பட்டதாக இப்பகுதி நாட்டார் வழக்கு செய்தி தெரிவிக்கிறது.

மேலும், வேளாம்பூரில் மக்கள் குடியிருந்த பகுதியில் அவர்கள் பயன்படுத்திய பானை ஓடுகள், கற்கள் கிடைத்துள்ளன. அவ்வூரின் கிழக்கே குழந்தைகளை அடக்கம் செய்ய தனி மயானம் இருந்த தாக தெரிகிறது. அதற்கான நடுகல் ஆதாரங்கள் கிடைத்துள் ளன. வேளாண் பொருட்களைப் பண்டமாற்று செய்ய வேளாம் பூருக்கு மேற்கே கோவிலூரில் பெரிய அளவிலான வாணிபத் தளமும், வேளாம்பூரில் சிறிய அளவிலான வணிக மையமும் செயல்பட்டுள்ளன.

விவசாயத்தின் அழிவு இங்கி ருந்த மக்களைப் புலம் பெயர வைத்துள்ளது. புலம் பெயர்ந்தவர் கள் அருகில் உள்ள சத்திரத்தில் முதலில் தங்கி, பின்னர் வாழ் வாதாரத்துக்காக பல ஊர்களுக்கு சென்றுவிட்டனா். இவா்கள் முதலில் தங்கிய சத்திரம் இன்று வேளாம்பூரின் முதல் எழுத்தைக் குறிக்கும் விதமாக வே.சத்திரப் பட்டி என அழைக்கப்படுவதாகத் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x