Published : 18 Sep 2018 02:57 PM
Last Updated : 18 Sep 2018 02:57 PM

பெரியார் சிலை அவமதிப்பு: தூண்டியவர்களை விட்டு, அம்புகளுக்குத் தண்டனை கொடுத்துப் பயனில்லை: கி.வீரமணி

பெரியார் சிலைகள் அவமதிப்பு சம்பவங்களில், தூண்டியவர்களை விட்டு, அம்புகளுக்குத் தண்டனை கொடுத்துப் பயனில்லை என, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கி.வீரமணி இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “பெரியாரின் 140 ஆவது பிறந்த நாள் விழாவை உலகமே கொண்டாடி, அவரது சிலைகளுக்கு மட்டுமல்ல, அவர் தந்த சுயமரியாதை, பகுத்தறிவு, கொள்கை லட்சியங்களுக்கும் மாலை போட்டு வரவேற்று, பெரியார் ஓர் மாமருந்து என்பதை உணர்ந்து கொண்டாடுகிறார்கள்.

பெரியார் உடலால் மறைந்து 45 ஆண்டுகள் ஆகிவிட்டன. அவர் வாழும்போது சந்தித்த காட்டுமிராண்டிகளின் எதிர்ப்பு இன்னமும் தொடர்கிறது என்பதற்குச் சரியான அடையாளமாக அவரது சிலை மீது காலணி வீசுவது போன்ற கீழ்த்தர நடவடிக்கைகளில் ஈடுபடுவது, குறிப்பாக ஆர்எஸ்எஸ், பாஜகவினர் இந்த கயமைச் செயல்களில் ஈடுபட்டு ஓடி ஒளிகின்றன.

காலணி தோரண வரவேற்புகள்

பெரியார் வாழ்ந்த காலத்திலேயே சிவகங்கையில் காலணி தோரணங்களின் வரவேற்பைச் சந்தித்தார். கடலூரில் இன்று கம்பீரமாக நிற்கும் சிலை எழுப்பப்பட்ட இடம், அவர் மீது 1944 இல் காலணி வீசப்பட்ட அதே இடம். எந்த எதிர்ப்பையும் எதிரிகளின் அநாகரிக காட்டுமிராண்டித்தன எதிர்ப்புகளை நேருக்கு நேர் சந்தித்த அவர், நமது கொள்கை வயலில் பயிர் வளர போடப்படும் உரங்கள் என்று சொல்லி எதிர் கொண்டவர். ஆர்எஸ்எஸ், பாஜக ராமனைக் கும்பிடுவோர், அவர்களின் ராமாயணத்தில் 14 ஆண்டுகள் சிம்மாசனத்தில் இருந்து ஆண்ட ராமனின் ஒரு ஜோடி காலணிகளுக்கு காலணி காதலர்களாகி திராவிட நெருப்புடன் விளையாடத் தொடங்கியுள்ளனர்.

தமிழக தலைவர்கள் கண்டனம்

காலணி வீசியவர்களை தமிழக அரசு உடனடியாகக் கைது செய்து சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பண்புள்ள கட்சித் தலைவர்கள், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட பல தலைவர்களும், அமைப்புகளும் கண்டனம் தெரிவித்திருப்பதோடு, காவல்துறை இத்தகைய கயவர்கள் மீது கடும் தண்டனை தரும் சட்டங்கள் பாய்ந்து, தமிழ்நாடு கலவர பூமியாகிவிடாமல் தடுக்கவேண்டும் என்று கூறியுள்ளனர்.

எய்தவனிருக்க அம்பை நோவது சரிதானா என்ற பழமொழிக்கொப்ப இந்த முயற்சிகளை தொடங்கி வைத்தவர், பண்பற்ற கொச்சை சொற்களை பெரியார் மீதும், உயர் நீதிமன்றத்தின் மீதும், காவல்துறை மீதும் வீசியுள்ள நபர் இன்னமும் போலீஸ் பாதுகாப்புடன் மேடைகளில் ஏறி புஸ்வாணம் விட்டுள்ளார்.

இது வடநாடு அல்ல, பெரியார் மண்

மாணவி சோபியா மீது உடனடியாகப் பாய்ந்த தமிழக காவல்துறையின் நடவடிக்கை, இத்தகையவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து பாயத் தயாராகவில்லையே, ஏன்? இந்த இரட்டை அளவுகோல் ஏன்? மனு ஆட்சியா? ஜனநாயகமா? என்ன இங்கே நடைபெறுகிறது? கலவரங்களைத் தூண்டி இந்துத்துவா வாக்கு வங்கியை ஒருமுனைப்படுத்திடும் தேர்தல் செப்படி வித்தைகளுக்கு தமிழகம் ஒன்றும் வடநாடு அல்ல. பெரியார் மண். திராவிட பூமி. இங்கு மக்களின் எதிர்வினைகள் அரசியல் ரீதியாக, ஜனநாயக வழிமுறைகளையொட்டியே வருமே தவிர, கலவரங்கள் மூலம் ஏற்படும் என்று கனவு கண்டு தூண்டிலைத் தூக்க நினைக்க வேண்டாம்.

காற்றை விதைத்துப் புயலை அறுவடை செய்யும் புத்தி கெட்ட புல்லர்கள் அவர்கள் என்பதை விரைவில் உணர்வார்கள். மத்தியில் எங்கள் ஆட்சி, மாநிலத்தில் எங்களுக்கு தோப்புக்கரணம் போடும் ஒரு முதுகெலும்பற்றவர்கள் ஆட்சி என்பதால்தானே, இந்த வன்செயலை புரிகின்றார்கள்.

தூண்டியவர்களை விட்டுவிட்டு அம்புகளைத் தண்டித்துப் பயனில்லை

அந்த ஆணவத்திற்கு வரும் தேர்தல்கள் மூலமும், மற்ற ஜனநாயக வழியில், அறப்போர்களின் மூலமும் விரைவில் இதன் தாக்கத்தை உணர்வீர்கள். இறுதியில் சிரிப்பவர்களே வெற்றி பெற்றவர்கள்!. அணையப் போகும் விளக்கு சற்று வெளிச்சம் காட்டுவது வழமைதானே. தூண்டியவர்களை விட்டு, அம்புகளுக்குத் தண்டனை கொடுத்துப் பயனில்லை” என கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x