Published : 20 Sep 2018 05:28 PM
Last Updated : 20 Sep 2018 05:28 PM

நடிகை நிலானி தற்கொலை முயற்சி: மருத்துவமனையில் அனுமதி

உதவி இயக்குனர் லலித் குமார் தற்கொலை விவகாரத்தில் விமர்சிக்கப்பட்டதால் மனம் உடைந்த நடிகை நிலானி பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உதவி இயக்குனர் லலித்குமார் நிலானியுடன் பழகி வந்த நிலையில் கடந்த வாரம் லலித்குமார் திருமணம் செய்துக்கொள்ள சொல்லி மிரட்டுவதாக போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்து போலீஸார் அழைத்து எச்சரித்து அனுப்பிய நிலையில் மறுநாள் லலித்குமார் தீக்குளித்து தற்கொலை செய்துக்கொண்டார்.

இந்த விவகாரத்தில் நிலானி லலித்குமாரை திருமணம் செய்துக்கொள்வதாக கூறி ஏமாற்றியதாகவும், பணத்தை கறந்துவிட்டு ஏமாற்றியதாகவும், போலீஸ் தேடுவதை அறிந்து தலைமறைவாக உள்ளதாகவும் சில ஊடகங்களில் செய்தி வெளியானது.

இதனால் அதிர்ச்சி அடைந்த நிலானி மறுநாள் காவல் ஆணையர் அலுவலகம் வந்து தன்னைப்பற்றி தவறாக செய்தி வெளியிடுவதை நிறுத்த வேண்டும் என புகார் அளித்தார். அப்போது ஊடகங்களிடம் பேட்டி அளித்தார்.

அதில் ‘‘தன்னைப்பற்றி ஊடகங்களிலும், வலை தளங்களிலும் இவ்வாறு அவதூறாக வெளியிடலாமா? எனக்கும் இரண்டு பிள்ளைகள் இருக்கிறது அவர்கள் எதிர்காலம் கருதி பேசாமல் இருந்தேன், என்னை இப்படி அபிராமியுடன் ஒப்பிட்டு எழுதுகிறீர்களே என்று கதறி அழுதார்.

என் கணவர் எங்களை நிராதரவாக விட்டுவிட்டு வேறு பெண்ணுடன் சென்றுவிட்டார். நான் சீரியல் நடிகை என்றுதான் பெயர். என்னிடம் ஒரு கார் கூட கிடையாது என்று தெரிவித்தார். காந்தி லலித்குமாருடன் நான் திருமணம் செய்துக்கொள்ளும் எண்ணத்தில் பழகியது உண்மை. நான் அதை மறுக்கவில்லை.

ஆனால் அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததும் பல பெண்களை ஏமாற்றி பணம் பிடுங்கியதும் தெரிய வந்தது. இதைப்பார்த்ததும் நான் அவரை திட்டி வீட்டை விட்டு விரட்டினேன். ஆனாலும் என்னை விடாமல் தொல்லைக் கொடுக்க ஆரம்பித்தார். போட்டோக்களை வெளியிடுவேன் என்று மிரட்ட ஆரம்பித்து தாலிக்கட்ட முயற்சித்தார்.

அவருடைய டார்ச்சரால் நானே கையை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றேன். லலித்குமார் ஒரு சைக்கோ, அவரிடமிருந்து விலக நான் போராடியது எனக்குத்தான் தெரியும். இதில் நான் எங்கே இவர் மரணத்திற்கு காரணமானவள். எந்த வகையில் நான் இதில் பொறுப்பாக முடியும் சொல்லுங்கள்.

பெண்கள் விஷயத்தில் தவறாக நடக்கும் ஒருவர் உடன் என்னால் எப்படி வாழ முடியும். பத்து வயதில் ஒரு பெண் குழந்தையை வைத்துள்ளவள் எப்படி ஏற்றுக்கொள்வேன். என்னை அபிராமிக்கு இணையாக என்னை ஒப்பிட்டு போடுகிறீர்களே சோஷியல் மீடியாவில் எப்படி இவ்வாறு தோன்றுகிறது’’ என்று கதறினார்.

இதன் பின்னர் நிலானியின் பேட்டியை ஊடகங்கள் ஒளிபரப்பின. ஆனாலும் அவர்மீது தொடர்ந்து விமர்சனங்கள், அவதூறுகள் எழுந்த நிலையில் மன உலைச்சலால் பதற்றத்துடன் காணப்பட்ட அவர் இன்று பூச்சி மருந்தை குடித்தார்.

மயங்கிய நிலையில் கிடந்த அவரை அக்கம்பக்கத்தவர் மீட்டு கே.கே.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x