Published : 03 Sep 2018 04:09 PM
Last Updated : 03 Sep 2018 04:09 PM

கார் முழுவதும் மிரட்டும் வாசகங்கள், மத்திய அரசின் சின்னம்; வாக்கி டாக்கி, கைவிலங்குடன் அமைச்சர்கள் வசிக்கும் பகுதியில் ரோந்து: தொழிலதிபர் கைது

மத்திய அரசின் குற்றம் மற்றும் ஊழல் கட்டுப்பாட்டு அமைப்பு, மனித உரிமை பத்திரிகையாளர் அமைப்பு என புதிய காரின் முன்னும் பின்னும் வாசகங்கள் பொறிக்கப்பட்டதுடன் வாக்கி டாக்கி, கைவிலங்குடன் முதல்வர், அமைச்சர் குடியிருப்பு பகுதியில் ரோந்து வந்த தொழிலதிபரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் முதல்வர், அமைச்சர்கள், தலைமை நீதிபதி, நீதிபதிகள் குடியிருப்பு அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் மகேந்திரா காரின் டியூவி 300 சொகுசுக் கார் ஒன்று சுற்றியபடி இருந்தது.

காரின் முன் பக்கம் மற்றும் பின் பக்கம் மத்திய அரசின் குற்றம் மற்றும் ஊழல் கட்டுப்பாட்டு அமைப்பு, மனித உரிமை பத்திரிகையாளர் அமைப்பு, சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்கல் அமைச்சகம் என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. மேலும், ஆளுநர், அமைச்சர்கள், வருமான வரித்துறை அதிகாரிகள் அமைத்திருப்பதுபோன்று பித்தளையால் ஆன இலச்சினை பொருத்தப்பட்டிருந்தது.

இது குறித்து சந்தேகமடைந்த பொதுமக்கள் காரின் அருகில் சென்று பார்த்தனர். ஆனால் அதில் உள்ள ஆங்கில வாசகங்கள் கொண்ட பித்தளை போர்டு அவர்களை மிரளச்செய்தது. அதனால் அவர்கள் வேடிக்கை மட்டும் பார்த்தபடி சென்றனர். வழியெல்லாம் வாகனச் சோதனை நடத்தும் போலீஸாரும், கிரீன்வேஸ் சாலை, அபிராமபுரம், சத்யா ஸ்டுடியோ பக்கம் வலம் வந்த காரின் அருகில்கூட செல்லவில்லை.

கார் அபிராமபுரம் அருகே வந்தபோது அப்பகுதியில் வாகனச்சோதனையில் இருந்த அபிராமபுரம் போக்குவரத்து ஆய்வாளர் திருவேங்கடம் காரைப் பார்த்து வித்தியாசமாக இருக்கிறதே என்று மடக்கச் சொன்னார். போலீஸார் அந்தக் காரை பயந்தபடியே மடக்கினர்.

காருக்குள் இருந்தவர் என்ன என்பதுபோல் பார்த்துள்ளார். சார், ''ஐயா யாருன்னு தெரிஞ்சுக்கலாமா?'' என போலீஸார் கேட்க, ''சற்று பொறுங்க'' என்று காரில் உள்ள வாக்கி டாக்கியில் பேசியுள்ளார். வாக்கி டாக்கியெல்லாம் வைத்து மத்திய அரசு என்றெல்லாம் போட்டுள்ளது, நாம பெரிய ஆபீஸரை மடக்கிட்டோமா? என்ன ஆகப்போகுதோ என்று பதைபதைப்பில் போலீஸார் இருந்துள்ளனர்.

’’என்ன விஷயம்’’ என்று காருக்குள்ளிருந்து இறங்கிய அவர் தோரணையுடன் கேட்க, ’’ஐயா யாருன்னு தெரிஞ்சுக்கத்தான் கேட்கிறோம், ஸ்மால் என்கொயரி'' என போலீஸார் தயங்கியபடி சொல்ல, ’’அப்படியா தாராளமாக பண்ணுங்க’’ன்னு அவர் கூற போலீஸாருக்கு அவரது நிதானம் மேலும் பயத்தைக் கொடுத்துள்ளது.

அதற்குள் ஆய்வாளர் திருவேங்கடம் கார் அருகில் வந்து, ''என்ன சார் யார் நீங்க? இது என்ன சிம்பல் நீங்கள் யார்'' என அடுக்கடுக்காக கேட்கவும், அந்த நபர் ஆடிப்போய் நான் ஹியூமன் ரைட்ஸ் கமிஷன் அது இதுன்னு சொல்ல முதலில் உங்கள் கார்டைக் காட்டுங்க எனக் கேட்க, அவர் முகத்தில் பயம் கிளம்பியுள்ளது. அப்போதுதான் மற்ற போலீஸாருக்கும் நிம்மதிப் பெருமூச்சு வந்துள்ளது.

அந்த நபர் ஒரு விசிட்டிங் கார்டைக் கொடுக்க, ''இதுபோன்று நூறு கார்டை அடிக்கலாமே, நீங்கள் யார் அதைச்சொல்லுங்கள்'' என ஆய்வாளர் திருவேங்கடம் கேட்க அந்த நபர் திருதிருவென விழித்துள்ளார். போலீஸார் அவரைக் காரைவிட்டு இறக்கி, காரை ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர். அதற்குள் அந்த நபர் தப்பி விட்டார்.

மோட்டார் வாகனச் சட்டம் 177-ன் கீழ் வழக்குப் பதிவு செய்து ஸ்டேஷனுக்கு கொண்டுசென்ற காரை போலீஸார் சோதித்தபோது அதற்குள் விலை உயர்ந்த வாக்கி டாக்கி ஒன்றும், அமெரிக்க பாணியிலான கை விலங்கு ஒன்றும் இருந்ததைப் பார்த்து திடுக்கிட்டுள்ளனர்.

பின்னர் காரின் ரெஜிஸ்ட்ரேஷன் எண்ணை வைத்து விபரங்களைச் சேகரித்தபோது கடந்த ஜூலை 31 அன்றுதான் கார் வாங்கப்பட்டுள்ளது தெரிய வந்தது.

தப்பியோடிய அந்தத் தொழிலதிபர் காரின் உரிமையாளர் ரவிசங்கர் (50) அபிராமபுரம் நான்காவது தெருவில் வசிப்பவர். காருக்குள் வாக்கி டாக்கி, கைவிலங்கு இருந்ததால் இதுகுறித்து போக்குவரத்து ஆய்வாளர் திருவேங்கடம் மேலதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தார்.

இதையடுத்து நேற்றிரவு உயர் அதிகாரிகள் உத்தரவுப்படி சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு வழக்கு மாற்றப்பட்டு வாகனத்தை சட்டம் ஒழுங்கு போலீஸாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் வாகனத்தில் குறிப்பிட்டிருந்த விலாசத்துக்கு சென்ற போலீஸார் ரவிசங்கரை ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர். அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் அவர் கட்டுமானத்தொழில் செய்யும் நபர் என்பதும், வாகனத்தில் ஒட்டப்பட்டுள்ள அனைத்தும் போலியானவை என்பதும் தெரியவந்தது.

ரவிசங்கரிடம் வாக்கி டாக்கி எப்படி வந்தது கைவிலங்கு எதற்கு என போலீஸார் விசாரித்து வருகின்றனர். வாக்கி டாக்கியுடன் இவர் சுற்றுவதால் இவருடன் தொடர்பில் உள்ள மற்ற வாக்கி டாக்கி நபர்கள் யார், இவர் போலீஸாரின் அலைவரிசையை ஊடுருவித் தகவல்களைப் பெற்றாரா? முதல்வர் அமைச்சர்கள், நீதிபதிகள் இல்லம் அமைந்திருக்கும் ஏரியாவில் எளிதாக இத்தனை நாட்கள் ரவிசங்கரால் எப்படி உலாவ முடிந்தது என்பது சந்தேகத்துக்குரிய ஒன்று.

ரவிசங்கர் வாக்கி டாக்கி பயன்படுத்துவதால் சதிக்கும்பல் எதனுடனாவது தொடர்பில் உள்ளாரா? என்பதும், விஐபிக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் செயல்களில் அவர் ஈடுபட்டுள்ளாரா? ரவிசங்கருடன் தொடர்பில் உள்ள மற்றவர்கள் யார், அவருக்கு பின்னிருக்கும் கும்பல் யார் என்பதும் விசாரணைக்குரிய விஷயங்களே.

போலீஸார் ரவிசங்கரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் ஆயுதம் எதுவும் வைத்துள்ளாரா? எனவும் அவரது வீட்டை சோதனையிட உள்ளனர்.

விசாரணைக்குப் பின்னர் ரவிசங்கரைக் கைது செய்த போலீஸார் அவர் மீது பிரிவு 170 (அரசு ஊழியர்போல் போலியாக நடித்து ஏமாற்றுவது), 481 (அசையும் பொருட்களில் தவறான இலச்சினைகளை, வார்த்தைகளைப் பொறிப்பது), 482 ( தவறான அடையாள குறியீடுகளைப் பதிவு செய்தல்), 483 ( அடுத்தவர்களின் அடையாளங்களை தனது என்று பயன்படுத்துவது) , 420 (மோசடி), 511 (மோசடி செய்ய முயற்சி) ஆகிய பிரிவின்கீழ் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x