

முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் இன்னும் 5 வழக்குகள் மட்டும் நிலுவையில் உள்ளன.
கடந்த 1991-96 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் பல்வேறு துறைகளில் ஊழல் முறை கேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தன 96-ல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இந்த முறைகேடு கள் தொடர்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் அமைச்சர்கள், ஐஏஏஸ் அதிகாரிகள் பலர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளை விசாரிப்பதற்காக 3 சிறப்பு நீதிமன்றங்கள் 1997-ம் ஆண்டு அமைக்கப்பட்டன.
3 சிறப்பு நீதிமன்றங்கள்
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ள சிங்காரவேலர் மாளிகையில் இந்த 3 சிறப்பு நீதிமன்றங்களும் இயங்கின. சென்னை 11-வது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம், 12-வது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம், 13-வது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் ஆகியவை முறையே முதலாவது சிறப்பு நீதிமன்றம், இரண்டாவது சிறப்பு நீதிமன்றம் மற்றும் மூன்றாவது சிறப்பு நீதிமன்றம் என அழைக்கப்பட்டன.
பெங்களூருக்கு மாற்றம்
இந்த 3 சிறப்பு நீதிமன்றங்களிலும் மொத்தம் 47 வழக்குகள் மீது விசாரணை நடந்தது. அவற்றில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோருக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூருக்கு மாற்றப்பட்டது. பல வழக்குகளில் சிறப்பு நீதிமன்றங்களில் ஏற்கெனவே தீர்ப்பு அளிக்கப்பட்டு, உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்துக்கு மேல் முறையீட்டுக்குச் சென்று வழக்குகள் முடிந்துவிட்டன. சில வழக்குகள் மட்டும் மேல் முறையீட்டில் நிலுவையில் உள்ளன.
கண்ணப்பன்
பெரும்பாலான வழக்குகளின் விசாரணை முடிந்துவிட்டதால், 2 சிறப்பு நீதிமன்றங்கள் கலைக்கப்பட்டு தற்போது ஒரு சிறப்பு நீதிமன்றம் மட்டும் சிங்காரவேலர் மாளிகையில் இயங்கி வருகிறது. இந்த நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர்கள் கண்ணப்பன், அரங்கநாயகம் மற்றும் அதிகாரிகள் 3 பேருக்கு எதிரான 5 வழக்குகள் மட்டும் தற்போது நிலுவையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.