Published : 25 Sep 2018 12:32 PM
Last Updated : 25 Sep 2018 12:32 PM

தாமாக முன்வந்து அவமதிப்பு வழக்கு தொடர முடியாது: எச்.ராஜா உயர் நீதிமன்றத்தில் முறையீடு

நீதிமன்றங்கள் குறித்து அவதூறாக பேசியதாக நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்ய சி.டி.செல்வம் அமர்வுக்கு அதிகாரம் கிடையாது என்று எச்.ராஜா தரப்பு முறையீடு செய்துள்ளது.

கடந்த 10 நாட்களுக்கு முன் புதுக்கோட்டை பகுதியில் விநாயகர் சிலைக்கு ஊர்வல மேடை அமைப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டபோது அந்த பகுதிக்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்த எச்.ராஜா ‘‘காவல் துறையில் மொத்தமும் ஊழல், காவலர்களின் மனதானது 100 சதவிகிதம் அழுகி போய்விட்டது’’ எனக்கூறினார்.

அதற்கு காவல் அதிகாரி உயர்நீதிமன்ற அனுமதி இல்லாததால் அவ்வாறு செய்ய முடியாது எனக் குறிப்பிடவே, கடும் கோபமடைந்த எச் ராஜா உச்சநீதிமன்றத்தை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தார்.

மேலும், தமிழக காவல் துறையையும் கடுமையாக விமரிசித்தார். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சி.சி.செல்வம் அமர்வு எச்.ராஜா மீது தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்தது எச்.ராஜாவுக்கு நோட்டிஸ் அனுப்பியது.

அதில், காவல்துறை, நீதித் துறையை விமர்சித்தது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்றும், 4 வாரத்துக்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

திருமயம் காவல்துறையினர் எச் ராஜா மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, 2 தனிப்படைகள் அமைத்துள்ளனர்.

இந்நிலையில் இன்று உயர்நீதிமன்றத்தில் எச்.ராஜா தரப்பு முறையீடு ஒன்றை செய்துள்ளது. அதில், நீதிமன்றங்கள் குறித்து தவறான அவதூறாக பேசியதாக நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்ய சி.டி.செல்வம் அமர்வுக்கு அதிகாரம் கிடையாது என்று எச்.ராஜா தரப்பு முறையீடு செய்துள்ளது.

இதுதொடர்பாக தலைமை நீதிபதி தஹில் ரமானி அமர்வு முன் எச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் டி.எஸ்.தினகரன் ஆஜராகி முறையீடு செய்தார். நீதிமன்றங்கள் குறித்த தவறாக பேசியதாக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது.

உயர் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவ்வாறு தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்ய நீதிபதிகள் சி.டி.செல்வம் தலைமையிலான அமர்வுக்கு அதிகாரம் இல்லை, இந்த உத்தரவை ஆய்வு செய்யவேண்டும் என்று முறையீடு செய்தார்.

இது சம்பந்தமான ஏற்கெனவே உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பான நகல்களை தாக்கல் செய்தால் அதுகுறித்து ஆய்வு செய்வதாக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x