Published : 15 Sep 2018 12:32 PM
Last Updated : 15 Sep 2018 12:32 PM

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை; உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை அனுப்பவில்லை: ஆளுநர் மாளிகை திட்டவட்ட மறுப்பு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை அனுப்பியதாக வெளியான தகவலை ஆளுநர் மாளிகை இன்று திட்டவட்டமாக மறுத்துள்ளது. மிகவும் சிக்கலான இந்த வழக்கில் சட்ட நுணுக்கங்களை ஆராய்ந்து தான் முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991 மே 21-ம் தேதி ஸ்ரீபெரும்பதூரில் மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த பூந்தமல்லி தடா நீதிமன்றம் 26 பேருக்கு மரண தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசா ரித்த உச்ச நீதிமன்றம், பேரறி வாளன், முருகன், சாந்தன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயகுமார் ஆகிய 7 பேரை தவிர மற்ற 19 பேரையும் விடுவித்தது.

2000-ம் ஆண்டில் நளினியின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. 2014-ல் மீதமுள்ள 6 பேரின் மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்தது. இதனையடுத்து அன்றைய முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு 7 பேரையும் விடுதலை செய்ய முடிவு செய்தது.

இதனை எதிர்த்து மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தது. இந்த வழக்கு விசாரணையின்போது, 7 பேரையும் விடுவிப்பது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும் என தற்போதைய மத்திய பாஜக அரசும் தெரிவித்தது.

இந்நிலையில் இந்த வழக்கில் கடந்த 6-ம் தேதி தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து முடிவு எடுத்து ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரைக்கலாம் என உத்தரவிட்டது.

இதையடுத்து, தமிழக அமைச்சரவைக் கூடி, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய அரசியல் சட்டம் 161-வது பிரிவின்கீழ் ஆளுநருக்கு பரிந்துரை செய்து தீர்மானம் நிறைவேற்றியது.

இதையடுத்து ஆளுநர் ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், இதுகுறித்து ஆளுநர் மாளிகை தரப்பில் இன்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

‘‘முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் 7 பேர் விடுதலை குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை அனுப்பியதாக சில பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளன. சில தொலைக்காட்சி சேனல்கள் இதை வைத்து விவாதம் நடத்தியுள்ளன.

ஆனால், 7 பேர் விடுதலை குறித்து எந்த அறிக்கையும் உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பவில்லை. இந்த வழக்கு சிக்கலான ஒன்று. சட்டம், நிர்வாகம் மற்றும் அரசியல் சட்ட ரீதியாக ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.

7விடுதலை குறித்து நீதிமன்ற உத்தரவு மற்றும் அமைச்சரவையின் பரிந்துரை ஆவணங்கள் 14ம் தேதி தான் ஆளுநர் மாளிகைக்கு வந்துள்ளன. இதுகுறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும். 7 பேர் விடுதலை குறித்து அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு நியாயமான முடிவு எடுக்கப்படும்’’ என ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x