Published : 26 Jun 2019 09:36 PM
Last Updated : 26 Jun 2019 09:36 PM

சென்னை மழை; திருவல்லிக்கேணியில் மின்சாரம் தாக்கி 2 மாடுகள் பலி: கார் ஆட்டோ மீது மரம் விழுந்தது

சென்னையில் இன்று மாலை பெய்த மழையில் திருவல்லிக்கேணியில் மின்சாரம் தாக்கி இரண்டு பசுமாடுகள் உயிரிழந்தன, சேத்துப்பட்டில் கார் மற்றும் ஆட்டோமீது மரம் விழுந்தது.

சென்னையில் கடந்த 7 மாதமாக மழை இல்லாத நிலையில் வெப்பச்சலனம் காரணமாக கடந்த 2,3 நாட்களாக மழை பெய்து வருகிறது. என்னதான் மழை பெய்தாலும் சென்னையின் பிரதான பகுதியான திருவல்லிக்கேணி, சிந்தாதிரிப்பேட்டை, புரசை, எழும்பூர் சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம் போன்ற பகுதிகளில் மழை இல்லாமல் இருந்தது.

இன்று மாலை சென்னை முழுதும் மழை பெய்தது. சாலையில் வெள்ளம்போல் நீர் பெருக்கெடுத்து ஓடியது. மாலை அலுவலகம் விடும் நேரத்தில் மழை பெய்ததால் யாரும் வெளியே போக முடியாத நிலை ஏற்பட்டது. மழை லேசாக விட்டப்பின் வாகன நெரிசலால் சென்னை திணறியது.

இந்நிலையில் திருவல்லிக்கேணி ஜாம்பசார் மார்க்கெட் பகுதியில் உள்ள மீன் மார்க்கெட் அருகில் மேய்ந்துக்கொண்டிருந்த மூன்று பசுமாடுகளை மின்சாரம் தாக்கியது. தரைக்கு மேலே இருந்த மின்சார கேபிள் நைந்துப்போய் துண்டிக்கப்பட்டு அதன் வழியாக மின்சாரம் அங்கிருந்த மாடுகள் மீது பாய்ந்தது.

இதில் ஒரு மாடு தப்பிவிட ஒரு மாடு உடனடியாக உயிரிழந்தது. ஒரு மாடு உயிருக்கு போராடியது. அந்தமாட்டை காப்பாற்ற மின்சாரத்தை நிறுத்தக்கோரி பொதுமக்கள் ராயப்பேட்டை மின்சார வாரியத்துக்கு போன்மேல் போன் செய்தும் யாரும் எடுக்காததால் மாடு சிறிது சிறிதாக உயிரைவிட்டது.

பின்னர் ஃபோர்மேன் நெம்பரை ஒருவர் கண்டுபிடித்து போன் செய்து வரவழைத்து மின்சாரத்தை நிறுத்தினார். ஆனால் அதற்குள் இரண்டு மாடுகளும் உயிரிழந்தன. அந்தப்பகுதியில் மீன் வியாபாரிகள், பொதுமக்கள் என மார்க்கெட்டுக்கு வருவோர் எண்ணிக்கை அதிகம். அதிர்ஸ்டவசமாக மழை காரணமாக யாரும் வராததால் உயிரிழப்பு ஏற்படவில்லை.

கடந்த ஆண்டு ஐஸ் ஹவுஸ் பகுதியில் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் தரையில் தாழ்வாக இருந்த மின்சாதனப் பெட்டியிலிருந்த மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். இந்த ஆண்டு தரைக்கு மேலே அஜாக்கிரதையாக பதிக்கப்பட்டிருந்த உயர் மின் கேபிள் அருந்து அதன் வழியாக மின்சாரம் பாய்ந்து இரண்டு மாடுகள் உயிரிழந்துவிட்டது.

இதேப்போன்று ஜனத்திரள், போக்குவரத்துமிக்க சேத்துப்பட்டு ஹாரிங்கடன் சாலையில் போக்குவரத்து சிக்னலுக்காக நின்றுக்கொண்டிருந்த சொகுசு கார் மற்றும் ஆட்டோ மீது சாலையோர மரம் ஒன்று திடீரென விழுந்ததில் கார் ஆட்டோ உருக்குலைந்து போனது. அதிர்ஷ்ட வசமாக யாருக்கும் காயமில்லை. இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்துக்கும் மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதேபோன்று சென்னை உதயம் திரையரங்கம்  அருகில் எம்ஜிஆர் நகரில் ஒரு வாரத்துக்கு முன் புதிதாக டிரான்ஸ்பார்ம் போடப்பட்டது. அதை அலட்சியமாக தரையில் பதித்திருந்ததால் தற்போது பெய்த மழையில் காரணமாக டிரான்ஸ்பார்ம் கீழே  விழுந்தது. இதனால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக டிரான்ஸ்பார்மர் விழுந்தபோது அருகில் யாரும் இல்லை.

சென்னையில் ஒருநாள் மழைக்கே மின்சாரம், சாலைகளில் வெள்ளம் போன்ற பிரச்சினைகள் காரணமாக சென்னைவாழ் மக்கள் பாதிக்கப்படும் நிலையில் மழைக்காலம் வருமுன்னே முன்னேற்பாடுகள் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்பது பொதுமக்கள் வேண்டுகோளாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x