

அமைச்சர் ஜெயக்குமார் போன்றோர் பேசிப் பேசித்தான் அரசியல் செய்யமுடியும் என்று அமமுக நிர்வாகி வெற்றிவேல் விமர்சித்துள்ளார்.
காயிதே மில்லத்தின் 124-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரின் நினைவிடத்தில் அரசியல் கட்சியினர் மரியாதை செலுத்தினர். இதில் அமமுக நிர்வாகியும் முன்னாள் எம்எல்ஏவுமான வெற்றிவேல் கலந்துகொண்டார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது 'அமமுக ஒரு கட்சி அல்ல. வெறும் குழு. கடலில் கரைத்த பெருங்காயம் போல அமமுக காணாமல் போய், அதன் நிலை பரிதாபகரமாகி விட்டது' என்று அமைச்சர் ஜெயக்குமார் பேசியது குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த வெற்றிவேல், ''ஜெயக்குமார் எத்தனை சீட்டுகள் ஜெயித்தார்? எங்களுடைய வாக்குகள் அனைத்தும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக் குளறுபடிகளால் வீணாகிவிட்டன. அவருடைய மகனையே அவரால் ஜெயிக்க வைக்க முடியவில்லை. இவிஎம் இயந்திரங்களுடன் சேர்ந்து வேலை பார்த்தால் எந்த அரசியல் கட்சியும் வெற்றி பெறமுடியாது. இது இந்தியா முழுவதும் நடந்துள்ளது.
மத்திய அரசை யார் பலமாக எதிர்க்கிறார்கள் என்பதைப் பார்த்து, எங்களை (அமமுக) காலி செய்தார்கள். அதேபோல மத்திய அரசை எதிர்த்த அனைத்துத் தலைவர்களையும் தோற்கடித்துவிட்டார்கள்.
அமைச்சர் ஜெயக்குமார் போன்றவர்கள் பேசிப் பேசித்தான் அரசியல் செய்யமுடியும். தினகரன், சசிகலாவை நம்பி எங்களுடன் இருக்கும் இந்தக் கூட்டம் எந்தக் காலத்திலும் சோடை போகாது. வருகின்ற காலத்தில் இவிஎம் இயந்திர மோசடிகளைத் தடுத்து, உலகம் முழுவதும் எப்படித் தேர்தல் நடக்கிறதோ, அதுபோல ஓட்டு சீட்டு முறையைக் கொண்டுவதற்கான போராட்டங்களை முன்னெடுத்து, அதில் வெற்றியும் பெறுவோம்.
அதிமுகவில் ஸ்லீப்பர் செல்கள் என்று சொன்னது எம்எல் ஏக்களை. அவர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள், இல்லை என்று யார் சொன்னது? தேவைப்படும்போது அவர்களைப் பயன்படுத்திக் கொள்வோம். அதற்கான நேரம் இன்னும் வரவில்லை'' என்றார் வெற்றிவேல்.