Published : 05 Jun 2019 06:03 PM
Last Updated : 05 Jun 2019 06:03 PM

மூன்றாவது மொழியாக எந்த மொழி படித்தாலும் ஆட்சேபனை இல்லை: திருநாவுக்கரசர்

மூன்றாவது மொழியாக எந்த மொழி படித்தாலும் ஆட்சேபனை இல்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

காயிதே மில்லத்தின் 124-வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரின் நினைவிடத்தில் அரசியல் கட்சியினர் மரியாதை செலுத்தினர். இதில் கலந்துகொண்ட காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ''புதிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கை சமீபத்தில் வெளியானது. அதில் மூன்றாவது மொழியாக இந்தி கட்டாயம் என்று கூறப்பட்டது. காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளின் எதிர்ப்பை அடுத்து, அது திரும்பப் பெறப்பட்டது.

இந்தியையோ, சமஸ்கிருதத்தையோ திணிக்கக்கூடாது என்பது கட்சிகளுக்கு அப்பாற்பட்டு, தமிழக மக்களின் கொள்கை ஆகும். மூன்றாவது மொழியாக யார் எதை விரும்புகிறார்களோ, அதைப் படிப்பதில் ஆட்சேபனை கிடையாது. தமிழ்நாட்டில் இந்தி பேசும் வட மாநில மக்கள் வாழ்கிறார்கள். அவர்கள் தாய்மொழி என்கிற வகையில் இந்தியைப் படிக்கலாம்.

மலையாளிகள், தெலுங்கர்கள் மலையாளத்தையோ தெலுங்கையோ படிக்கலாம். விரும்புகிறவர்கள், தமிழ், ஆங்கிலம் தவிர்த்து விருப்பப் பாடமாக மூன்றாவது மொழியைத் தேர்வு செய்து படிக்கலாம். இந்த மொழியில்தான் படிக்கலாம் என்று விரும்புகிறவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

அதே போல டெல்லி, மும்பை, கர்நாடகா என பல்வேறு பகுதிகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள். அங்கு அவர்களின் குழந்தைகள் படிக்கிறார்கள். அவர்கள் தமிழ் படிக்க விரும்பினால், அந்தந்த மாநிலங்களில் மூன்றாவது மொழியாக தமிழ் படிக்க அனுமதிக்க வேண்டும் என்பது நியாயமான கோரிக்கை.

அதேவேளையில் இந்தி உட்பட எந்த மொழியையும் கட்டாயப்படுத்தித் திணிக்கக்கூடாது'' என்றார் திருநாவுக்கரசர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x