

தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையில் செல்லவில்லை, தளர்ச்சிப் பாதையில் தடுமாறுகிறது என்று, திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுகுறித்து, கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
உள்ளாட்சி மன்ற இடைத் தேர்தல்களில், திமுக, தேமுதிக, பாமக, மதிமுக, மனித நேய மக்கள் கட்சி, புதிய தமிழகம், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், காங்கிரஸ் போன்ற கட்சிகள், ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரான ஆளுங்கட்சியின் அராஜகங் களையும், அக்கிரமங்களையும் எதிர்த்துப் போட்டியிட இயலாது என்று போட்டியிடாமல் புறக்கணித்து விட்டன.
பாஜகவும், கம்யூனிஸ்ட் கட்சி களும் மட்டும் இடைத்தேர்தலில் போட்டியிட்டுகிறது. இருப்பினும் 3,075 இடங்களுக்கு நடைபெற வேண்டிய தேர்தலில், 1,589 இடங்களில் வேட்பு மனுக்களைத் தள்ளுபடி செய்தோ, வாபஸ் பெற செய்தோ, மாநிலத் தேர்தல் ஆணையமும், அதிமுகவும் கூட்டாக இணைந்து, ஆளுங்கட்சியினர் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவித்து விட்டனர். அந்த அளவுக்குத் தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியில் ஜனநாயகம் கொடி கட்டிப் பறக்கிறது.
தற்போது, அதிமுக ஆட்சியில் எதிர்மறை நடவடிக்கைகளின் காரணமாக மூன்று தனியார் கார் நிறுவனங்கள், தங்களுடைய தலைமை அலுவலகங்களை, வேறு மாநிலங்களுக்கு மாற்றிவிட்டதாக நாளேடுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு முதல்வர் ஜெயலலிதாவின் பதில் என்ன?
திமுக ஆட்சியில் 2011-ம் ஆண் டில் பேரவையில் படிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் உறுதியான பொருளாதார வளர்ச்சித் திட்டங்களின் காரணமாக, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி வலுவான நிலையில் இருந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.
அதிமுக ஆட்சியில், 13-2-2014 அன்று பேரவையில் படிக்கப்பட்ட நிதி நிலை அறிக்கையில், சரிநிகர் வளர்ச்சியை எட்ட மாநில அரசு கடுமையாக முயன்று வரும் அதே வேளையில், வளர்ச்சியைத் தூண்டவும், நலிவுற்று வரும் பொருளாதாரச் சூழ்நிலைகளை மேம்படுத்தவும், மத்திய அரசு தவறியதன் காரணமாக, பொருளாதார வளர்ச்சியும், முதலீடுகளும் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாகப் பாதிப்புக்குள்ளாகியுள்ளன என்று, மத்திய அரசின் மீது பழி போடப்பட்டுள்ளதே தவிர, தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி உயர்ந்திருப்பதாக எந்தத் தகவலும் இல்லை.
தமிழகத்தை முதல் மாநில மாக மாற்றிக் காட்டுவேன் என்ற ஜெயலலிதாவின் முழக்கம் வெற்று முழக்கமாகி விட்டது. தமிழகத் துக்கான தொலைநோக்குத் திட்டம் என்பது, வெறும் காகிதத் திட்டமாகி விட்டது. தமிழகத்தின் வளர்ச்சி அனைத்து முனைகளிலும் தரை தட்டிய கப்பலாகி விட்டது.
இந்த நிலையில், தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையில் செல்கிறது என்று ஜெயலலிதா, பேசியிருப்பதில் எந்தவிதப் பொருளும் இல்லை. உண்மையில் தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையில் செல்லவில்லை. வாட்டத்தைப் பெருக்கிடும் தளர்ச்சிப் பாதையில் தான் தடுமாறிக் கொண்டிருக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.