

சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற தமிழக முதல்வரின் சமாதானத்தை மக்கள் ஏற்கமாட்டார்கள் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
சேலம் சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை அமல்படுத்தும் நோக்கத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி அரசியலுக்காக அவரது கொள்கையை விட்டுத்தந்து சமரசம் செய்து கொள்கிறார்.
ஆனால் அப்பகுதி மக்கள் தமிழக முதல்வரின் சமாதானத்தையும், சமரசத்தையும் ஏற்கமாட்டார்கள்.
தமிழர்களின் உரிமையைக் காக்கும் காவிரி மேலாண்மை வாரியத்தை முற்றிலும் பயனற்றதாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தடுக்காவிட்டால் காவிரி டெல்டா மாவட்டங்கள் முழுவதும் அழிந்துவிடும்.
இந்த பேராபத்தை தடுக்க வேண்டும். இதற்கிடையில் காவிரி கோதாவரி இணைப்பு திட்டம் என்பது மக்களை ஏமாற்றும் கண்துடைப்பு அறிவிப்பாகும்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நடைபெறும் பேரழிவுக்கு எதிரான பேரியக்கம் சார்பில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் வழியில் விழுப்புரம் மரக்காணத்தில் இருந்து ராமேஸ்வரம் வரையிலான 596 கிமீ தூரத்திற்கு மனித சங்கிலி போராட்டம் ஜூன் 12ம்தேதி நடைபெறவுள்ளது.
இதில் திமுக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் பங்கேற்கின்றன. மதிமுக சார்பில் நான், தஞ்சை மாவட்டம் அதிராமபட்டினத்தில் மனித சங்கிலியில் பங்கேற்கிறேன்.
இதுபோன்று நமக்கு வரும் பேராபத்துகளை தடுக்காவிட்டால் வருங்கால சந்ததியினர் பல இன்னல்களுக்கும் ஆளாவார்கள்.
இதனை தடுக்கும் வகையில் நடைபெறும் மனிதச் சங்கிலியில் தமிழக மக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்