நவீன அறுவை சிகிச்சையில் மியாட் மருத்துவமனை சாதனை
சென்னை ராமாபுரத்தில் உள்ள மியாட் மருத்துவமனை நவீன முறையில் அறுவை சிகிச்சைகளை செய்து சாதனை படைத்துள்ளது.
இது தொடர்பாக மியாட் மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
மியாட் மருத்துவமனையில் வழக்கமான சிகிச்சை முறையை தவிர்த்து, சாவி துவார அளவு மட்டுமே துளையிட்டு இருதய அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு வருகின்றன.
வழக்கமான அறுவை சிகிச்சை முறையில் 700 மி.லி. ரத்த இழப்பு ஏற்படும். ஆனால் இந்த நவீன அறுவை சிகிச்சையின்போது 200 மி.லி. மட்டுமே ரத்த இழப்பு ஏற்படும். மேலும், மார்பு பகுதியில் எலும்பை வெட்டியெடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இதனால் வலி குறைவாகவே இருக்கும்.
இந்திய இளைஞர்களிடம் அதிகம் காணப்படும் “ருமாடிக் வால்வுலார்” என்ற இதய நோய்க்கு இந்த சிகிச்சை நல்ல பலனளிக்கும். இந்த அறுவை சிகிச்சை முறையில் இதய வால்வுகளை மாற்றாமல் அவை சரி செய்யப்படுகின்றன. இதனால் பக்க விளைவுகள் குறையும்.
இந்த அறுவை சிகிச்சைப் பற்றிய நேரடி பயிலரங்கு வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில் இந்தியாவிலிருந்து 100 இருதய சிகிச்சை நிபுணர்கள் பங்குபெற்றனர். சனிக்கிழமையும் (ஏப்ரல் 5) பயிலரங்கு நடைபெறுகிறது என்று செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
