Published : 01 Jun 2019 04:15 PM
Last Updated : 01 Jun 2019 04:15 PM

புதிய கல்விக் கொள்கை: கருத்து தெரிவிக்க 6 மாத காலம் நீட்டிப்பு வழங்குக; மார்க்சிஸ்ட்

புதிய கல்விக் கொள்கை மீது கருத்து தெரிவிக்கும் காலத்தை 6 மாதமாக நீட்டிக்க வேண்டும், என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, கே. பாலகிருஷ்ணன் இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "மத்திய பாஜக அரசு பதவி ஏற்ற உடனேயே புதிய கல்விக்கொள்கைக்கான வரைவு திட்டத்தை வெளியிட்டுள்ளது. இதன் மீது 30 நாட்களுக்குள் கருததுக்களை தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

கல்வியை காவிமயமாக்குவது, வணிக மயமாக்குவது, கல்வியை மாநில உரிமைகளை மொத்தமாக கபளீகரம் செய்வது என்பதை நோக்கமாகக் கொண்டு பாஜக முந்தைய அரசுகள் செயல்பட்டு வந்திருக்கின்றன.

இந்த பின்னணியில், புதிய வரைவுக்கொள்கை மக்கள் மத்தியில் அச்சத்தையும், சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது. இதுவரையிலும் இருமொழிக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் தமிழகத்தில் தற்போது மும்மொழித்திட்டத்தை அமலாக்குவதன் மூலம் இந்தியை திணிப்பதற்கான முயற்சி இது என்பது வரைவு திட்டத்தில் தெளிவாகிறது. 

இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் எதிர்காலத்தில் இந்தியா சந்திக்கும் நவீன சவால்களை ஈடுகொடுக்கும் வகையில் ஏற்புடையதாக கல்விக்கொள்கை அமைய வேண்டும். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டால் அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள், பொதுமக்கள் இதன் மீது 30 நாட்களுக்குள் கருத்து தெரிவிப்பது சாத்தியமற்றது.

எனவே, குறைந்தபட்சம் கருத்து கேட்பதற்கான காலத்தை 6 மாதமாக நீட்டிக்க வேண்டுமென்றும் அதேபோன்று முழுமையான வரைவு அறிக்கை அனைத்து இந்திய மொழிகளிலும் கிடைக்கும்படி செய்யப்பட வேண்டுமென்றும், அதன் பிறகு கருத்துக்கேட்புக்கான அவகாசம் அறிவிக்கப்பட வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. 

இந்த வரைவு அறிக்கையின் மீது முழுமையான கருத்துக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு பின்னர் தெரிவிக்கும். அதேசமயம் தமிழகம் உள்ளிட்டு எந்தவொரு மாநிலத்தின் மீதும் இந்தியை கட்டாயமாக திணிப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த முயற்சியை கைவிட வேண்டும்",என,

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x