Published : 15 Jun 2019 11:19 AM
Last Updated : 15 Jun 2019 11:19 AM

அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் தொழில் பழகுநர் திட்டம்: ஊதியத்துடன் விவசாயத்தை கற்றுக் கொடுப்பதற்கான பயிற்சி

தனியார் தொழில் நிறுவனங்களை போல் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு தோட்டக்கலை பண்ணைகளிலும் ஊதியத்துடன் விவசாயத்தை கற்றுக்கொடுப்பதற்கான ஓராண்டு ‘அப்பரெண்டிஷ்’ (apprentice) பணியாளர்கள் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த பயிற்சி முடிப்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுவதுடன் தோட்டக்கலைத்துறை வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கப்பட உள்ளது.

தமிழ்நாடு அரசு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை கீழ் தமிழகத்தில் 60 தோட்டக்கலைப் பண்ணைகள், 12 தாவரவியல் பூங்காக்கள் செயல்படுகின்றன. இந்த பண்ணைகளில் விவசாயிகளுக்கு மானிய விலையில், தென்னை, மா, கொய்யா, எலுமிச்சை, சப்போட்டா, மல்லிகை, ரோஜா உள்ளிட்ட பலவகை பழங்கள், மலர்கள், காய்கறி பயிர்களின் மரபினம் மாறாத தரமான நாற்றுகள், விதைகள் உற்பத்தி செய்து விவசாயிகளுக்க மானிய விலையில் வழங்கப்படுகிறது.

தற்போது இந்த பண்ணைகளை அடுத்தக்கட்டத்திற்கு மேம்படுத்தவும், விவசாயிகளுக்கு தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தனியார் தொழில் நிறுவனங்களை போல் ஊதியத்துடன் விவசாயத்தை கற்றுக் கொடுப்பதற்கான ‘அப்பரெண்டிஷ்’(தொழில் பழகுநர்’ திட்டம்) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் பூஞ்சுத்தி அரசு தோட்டக்கலைப்பண்ணையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் பூபதி கூறுகையில், "பூஞ்சுத்தியில் மட்டும் அரசு தோட்டக்கலைப்பண்ணை 12 ஹெக்டேரில் அமைந்துள்ளது.

கடந்த ஒரு ஆண்டில் மட்டும் இந்த பண்ணை, அரசு தோட்டக்கலைத்துறைக்கு ரூ.92 லட்சம் வருமானம் ஈட்டிக் கொடுத்துள்ளது. இதுபோல் ஒவ்வொரு பண்ணையும் மிக சிறப்பாக செயல்படுகின்றன. இந்த பண்ணைகளுடைய வருவாயை ஈட்டவும், அதிகளவிலான தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகளை உருவாக்கவும் தமிழ்நாடுஅரசு தோட்டக்கலைத்துறை ஊதியத்துடன் விவசாயத் தொழிலை கற்றுக் கொடுப்பதற்கான ‘அப்பரெண்டிஷ்’ திட்டத்தை தொடங்கியுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள 60 தோட்டக்கலைப் பண்ணைகளில் மொத்தம் 500  அப்பரெண்டிஷ் பணியாளர்கள் பணியமர்த்தப்படுகின்றனர்.

இந்த பயிற்சி காலத்தில் ஒவ்வொருக்கும் மாதம் ரூ.7,500 ஊதியம் வழங்கப்படும். இந்த பயிற்சி ஒராண்டு காலம் வழங்கப்படும். அந்தந்த மாவட்டத்தில் உள்ள அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் இவர்கள் பணியமர்த்தப்படுவார்கள். ஒராண்டு பயிற்சி முடிவில் அவர்களுக்கு பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும்.

தோட்டக்கலைத்துறை பண்ணை வேலைவாய்ப்புகளில் இவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மதுரை பூஞ்சுத்தி தோட்டக்கலைப் பண்ணையில் 10 தோட்டப் பராமரிப்பாளர்கள், 2 பிளம்பர், 2 பிட்டர், ஒருஎலக்ட்ரிசியன் உள்பட 15 ‘அப்பரெண்டிஷ்’ பணியாளர்கள் தேர்வு செய்து இன்று பணிமர்த்தப்பட்டுள்ளனர். படித்துவிட்டு வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு இந்த திட்டம் மிகுந்த பயனுள்ளதாக அமையும். 

இந்த திட்டத்தின் முன்னேற்றத்தைப் பொறுத்து, அடுத்தடுத்த ஆண்டுகளில் ‘அப்பரெண்டிஷ்’ பணியாளர்கள் பணிமர்த்தப்படுவார்கள். தோட்டப் பராமரிப்பாளர் பணிக்கு 8–ஆம் வகுப்பு முதல் 10 பத்தாம் வகுப்பும்,

பிட்டர், பிளம்பர், கட்டுமானப்பணிக்கு ஐடி படிப்பும் முடித்து இருக்க வேண்டும். விருப்பமுள்ள இளைஞர்கள், பெண்கள்

தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் பதிவு செய்யலாம்.

அவர்கள், மத்திய அரசின் தோட்டக்கலை துறை ‘ஏ’ நம்பர் வாங்கி கொடுத்து ‘அப்பரெண்டிஷ்’ பணியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். ஊதியம், அவர்கள் வங்கி கணக்கில் சேர்க்கப்படும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x