

நாங்குநேரி இடைத்தேர்தல் செலவை, எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த வசந்தகுமாரிடம் வசூலிக்கக்கோரி தாக்கலான மனுவை உயர் நீதிமன்றம் மதுரை கிளை தள்ளுபடி செய்தது.
இது தொடர்பாக மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
நாங்குநேரி தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர் வசந்தகுமார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்.
மக்களவை தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப்பெற்றார். இதனால் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
இதனால் நாங்குநேரி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தி புதிய எம்எல்ஏவை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தேர்தல் நடத்த கோடிக்கணக்கான ரூபாயை அரசு செலவிடுகிறது.
தமிழகம் ஏற்கெனவே கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இந்நிலையில் இடைத்தேர்தல் செலவால் அரசுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படும்.
எனவே நாங்குநேரி இடைத்தேர்தல் செலவை, இடைத்தேர்தல் வருவதற்கு காரணமான எச்.வசந்தகுமாரிடம் வசூலிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், பி.புகழேந்தி அமர்வில் இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வந்தது.
இந்நிலையில், மனுதாரரின் கோரிக்கையை ஏற்க மறுத்து, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.