Published : 12 Jun 2019 09:05 AM
Last Updated : 12 Jun 2019 09:05 AM

அமித் ஷாவுடன் தங்கமணி, வேலுமணி சந்திப்பு; தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தமிழக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் டெல்லியில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின்போது தமிழக உள்ளாட்சிகளுக்கான நிதி குறித்து கோரிக்கை விடுத்ததுடன், தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் ஆலோசனை நடத்தியதாக கூறப் படுகிறது.

தமிழகத்தில் அதிமுக தலைமை யிலான கூட்டணியில் பாஜக இணைந்து, மக்களவை தேர்தலை சந்தித்தது. இத்தேர்தலில் ஒரே ஒரு தொகுதியை மட்டுமே இந்த கூட்டணியால் பெற முடிந்தது. இந்நிலையில், மத்திய உள்துறை யின் புதிய அமைச்சராக பொறுப்பேற்றுள்ள பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவை தமிழக அமைச்சர்கள் பி.தங்கமணி மற்றும் எஸ்.பி வேலுமணி ஆகியோர் நேற்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது முதல்வர் சார்பில் அமித் ஷாவிடம் அமைச்சர் எஸ்.பி.வேலு மணி மனு ஒன்றை அளித்தார்.

அந்த மனுவில் கூறியிருப்ப தாவது:

தமிழகத்துக்கு 14-வது மத்திய நிதி ஆணையத்தின் பரிந்துரைப் படி, உள்ளாட்சிகளுக்கு 2017-18-ம் ஆண்டு வழங்கவேண்டிய செயல் பாட்டு நிதி ரூ.560 கோடியே 15 லட் சம் மற்றும் 2018-19-ம் ஆண்டு 2-ம் தவணையாக வழங்க வேண் டிய அடிப்படை நிதி ரூ.1,603 கோடியே 3 லட்சம் ஆகியவற்றை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், மத்திய ஊரக வளர்ச் சித் துறையின் விதிகளை தளர்த்தி, 2 லட்சம் பேருக்கு பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் வீடு கட்டித்தர அனுமதிக்க வேண்டும். பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் விடுபட்டுப்போன 8 லட்சத்து 28 ஆயிரத்து 419 பயனாளிகளுடைய விண்ணப்பங்களை நிரந்தர காத் திருப்போர் பட்டியலில் வைத்து அவர்களுக்கு வீடு கட்டித்தர வேண் டும்.

கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு முதலில் கைய கப்படுத்த அறிவிக்கப்பட்ட 627.89 ஏக்கர் நிலத்துக்கு பதில், தற்போது ஓடுதளம் அமைக்க 365 ஏக்கராக நிலத்தை இந்திய விமான நிலை யங்கள் ஆணையம் குறைத்துள் ளது. இந்த முடிவை மறுபரிசீலனை செய்து தற்போதைய 627.89 ஏக்கர் நில அளவே தொடரும்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

அமித் ஷாவுடனான இந்த சந்திப்பு அலுவல் ரீதியானது என் றாலும், அரசியலும் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக, தற் போது அதிமுகவில் ஒற்றை தலைமை தொடர்பான சர்ச்சை எழுந்துள்ளது.

மக்களவை தேர்தல் தோல்வி மற்றும் ஓபிஎஸ் மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி உள்ளிட்ட விஷயங்களில் முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக கருத்து வெளியாகியுள்ளது.

அதிமுகவில் நிலவும் சூழல்...

ஜூன் 15-ம் தேதி பிரதமர் மோடியை முதல்வர், துணை முதல்வர் இருவரும் டெல்லியில் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் முன்கூட்டியே அமித் ஷாவை சந்தித்து, அமைச்சர்கள் இருவரும் அதிமுகவில் தற்போது நிலவும் சூழல் குறித்து பேசியதாக கூறப்படுகிறது.

சட்டப்பேரவையை கூட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி வரும் நிலையில், அடுத்த கட்ட அரசியல் நகர்வு கள் குறித்தும் இருவரும் அமித் ஷாவிடம் ஆலோசித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்தித் துள்ள நிலையில், தமிழக மூத்த அமைச்சர்களும், முதல்வர் கே.பழனிசாமிக்கு நெருக்கமான வர்களுமான தங்கமணி, வேலுமணி ஆகியோர் சந்தித்திருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x