

ஜெயலலிதா அவர்களால் 3 முறை முதல்வரான ஓ.பி.எஸ் அவர்களே, கட்சியையும், ஆட்சியையும் தலைமை ஏற்க வேண்டும் என்று தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் துணை முதல்வர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னதாக நேற்று (புதன்கிழமை) சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியே பொதுச்செயலாளராக வரவேண்டும் என வலியுறுத்தி போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.
இந்நிலையில், ஜெயலலிதா அவர்களால் 3 முறை முதல்வரான ஓ.பி.எஸ் அவர்களே, கட்சியையும், ஆட்சியையும் தலைமை ஏற்க வேண்டும் என்று தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் துணை முதல்வர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.
சில தினங்களுக்கு முன்னதாக அதிமுகவுக்கு ஒற்றைத்தலைமையே வேண்டும் என்று மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., ராஜன்செல்லப்பா கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஆங்காங்கே ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் ஒற்றைத்தலைமை குறித்து போஸ்டர்கள் பேனர்கள் வைத்தனர். இதனால் கட்சியில் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்ட நிலையில், அதிமுக கட்சி தலைமை குறித்து யாரும் பேசக்கூடாது என்று அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ், ஈபிஎஸ் கூட்டாக அறிவிப்பு வெளியிட்டனர்.
இந்நிலையில் ஓ.பி.எஸ்-ன் சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி நகர் பகுதியில் அவருடைய ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. "ஜெயலலிதா அவர்களால் 3 முறை முதல்வரான ஓ.பி.எஸ் அவர்களே, கட்சியையும், ஆட்சியையும் தலைமை ஏற்க வாருங்கள்.. இவண் தர்மயுத்த தொண்டர்கள்" என்ற வாசகங்கள் அடங்கிய அந்த போஸ்டரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.