

தலைவர் கருணாநிதியைப் போன்ற ராஜதந்திரி ஸ்டாலின் என்று நிரூபிக்கக்கூடிய வகையில் மக்களவைத் தேர்தலில் வெற்றி அமைந்தது என்று விசிக தலைவர் திருமாவளவன் புகழாரம் சூட்டினார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி போட்டியிட்ட 39 தொகுதிகளில் 38-ல் வென்றது. திமுக 23 தொகுதிகளில் வென்று மக்களவையில் பாஜக, காங்கிரஸுக்கு அடுத்த 3-வது பெரிய கட்சி என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளது. 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 13-ல் திமுக வென்றது.
இந்த வெற்றியை அளித்த தமிழக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளான இன்று சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் விசிக தலைவர் திருமாவளவன் பேசியதாவது:
''சிதம்பரத்தில் நடைபெற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேசிய வார்த்தைகள் என் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றுள்ளன. இத்தொகுதியில் திருமாவளவன் பெறப்போகிற வெற்றி தலைவர் கலைஞரின் வெற்றி என்று குறிப்பிட்டார். சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனாகிய நான் வெற்றி பெற்றேன் என்பதை விட முத்தமிழ் அறிஞர் கலைஞர் வெற்றி பெற்றார் என்று எண்ணுகிறேன்.
எக்காரணம் கொண்டும் திருமாவளவன் தோல்வியடையக் கூடாது. வெற்றி பெற வேண்டும் என்று திமுகவினருக்கு ஸ்டாலின் ஆணையிட்டார். அவருக்கு என் மனமுவந்த நன்றியைக் காணிக்கையாக்குகிறேன்.
அண்ணா இல்லாத சூழலில் தலைவர் கலைஞர், அண்ணா வழியில் ஓய்வறியாது உழைப்போம் என்றார். கலைஞர் வழியில் கடுமையாக உழைப்போம் என்றார் ஸ்டாலின். திண்டுக்கல் தொகுதியில் களம் கண்ட வேட்பாளர் 5 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். சிதம்பரம் தொகுதியில் 3 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் நான் வெற்றி பெற்றேன்.
கலைஞரைப் போன்ற ராஜதந்திரி ஸ்டாலின் என்று நிரூபிக்கக்கூடிய வகையில் மக்களவைத் தேர்தலில் வெற்றி அமைந்தது. அண்ணாவுக்குப் பிறகு திமுகவைக் கட்டிக்காத்த பெருமை கலைஞரைச் சாரும். 5 முழக்கங்களை உறுதிமொழியாகக் கொண்டு திமுக எனும் இயக்கத்தை 40 ஆண்டுகளுக்கும் மேலாக பேணிக் காத்தவர் கலைஞர். கலைஞர் இல்லை, இனி திமுக கட்டுப்பாடுடன் இருக்காது, கழகம் சீர்குலையும் என்று நினைத்து மனப்பால் குடித்தவர்கள் அதிகம். இப்படிக் கனவு கண்டவர்களின் எண்ணத்தில் மண் விழ, உதய சூரியனாய் அல்ல புதிய சூரியனாய் ஸ்டாலின் திமுகவைக் கட்டிக் காப்பாற்றியதுதான் அவரது முதல் சாதனை.
போட்டியாளர்களுடன் மோத முடியும். கலைஞர் இல்லாத நிலையில் திமுகவைக் கட்டிக் காப்பாற்றி, கட்டுக்கோப்பாக வழிநடத்தி ஆற்றலுடன் கூட்டணியைக் கட்டமைத்தார் ஸ்டாலின். தேர்தல் நேரத்தில் வாக்கு வங்கியை அடிப்படையாகக் கொண்டு பேரம் பேசி கூட்டணி அமைக்காமல், கொள்கைக்காக கூட்டணி வகுத்து சனாதன சக்திகளுக்குப் பாடம் புகட்ட, திமுக தலைமையில் கூட்டணி அமைத்தார் ஸ்டாலின்.
நீட் எதிர்ப்பு, ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு என்று மோடிக்கு எதிராக ஒரு கருத்துருவாக்கத்தை உருவாக்கி மிகச் சிறப்பான முறையில் கூட்டணியைக் கட்டி எழுப்பியவர் ஸ்டாலின். ஒட்டுமொத்த இந்தியாவுமே தமிழகத்தை திரும்பிப் பார்க்க வைத்த ஆளுமையைக் கொண்டவர் ஸ்டாலின்.
ஒரே தேசம் ஒரே கலாச்சாரம் என்ற முழக்கத்தைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறோம். அது இந்தியாவின் பன்மைத்துவத்தை சிதைக்கும் முயற்சி. பல மொழிகள், மதங்கள், கலாச்சாரங்கள் நிலவும் இந்த தேசத்தில் எல்லாவற்றையும் அழித்துவிட்டு ஒரே தேசம் ஒரே கலாச்சாரம் முன்னெடுப்பதுதான் சனாதன கும்பல். ஒரே மதம் இருந்தால்தான் ஒரே கலாச்சாரம் இருக்க முடியும். வேறு மதங்கள் இருக்கக்கூடாது என்பதுதான் சனாதன கும்பலின் திட்டம். இந்த ஆபத்தான நிலையிலிருந்து மக்களைக் காப்பாற்றும் பொறுப்பு திமுகவுக்கு இருக்கிறது.
மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்பதே இப்போதும் பின்பற்ற வேண்டிய முழக்கம். அகில இந்திய அளவில் மதச்சார்பின்மையைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு திமுகவுக்கு உள்ளது. மற்ற மாநிலங்களில் இந்தப் புரிதல் இல்லை.
வட இந்தியர்கள் ஆக்கிரமிப்பு தமிழகத்தில் அதிகமாகியுள்ளது. அனைத்து அரசு வேலைகளிலும் தமிழர் உரிமை பறிபோயுள்ளது. இந்தி திணிப்பை எதிர்த்து போராடியதன் காரணமாக தமிழகம் தலை நிமிர்ந்து இருக்கிறது''.
இவ்வாறு திருமாவளவன் பேசினார்.