

பெரம்பலூர் அருகே வருமான வரித்துறை அலுவலர்கள் எனக்கூறி வர்த்தகர் வீட்டில் ரூ.12 லட்சம் மதிப்புள்ள தங்கம், வெள்ளி, ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் பிரதான சாலையருகே வசித்து வருபவர் ஜெயப்பிரகாஷ்(56). அரிசி ஆலை, உரக்கடை உள்ளிட்ட வர்த்தகங்களை மேற்கொண்டு வரும் இவரின் கடை, வீடு ஆகியன அருகருகே அமைந்துள்ளன.
நேற்று காலை 6.30 மணியளவில் இவரது வீட்டுக்கு 8 பேர் காரில் வந்துள்ளனர். 2 பேர் வெளியே காத்திருக்க, 6 பேர் உள்ளே நுழைந்து, தாங்கள் திருச்சி வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து வந்திருப்பதாக ஜெயப்பிரகாஷிடம் கூறியுள்ளனர். தொடர்ந்து பல்வேறு கணக்கு வழக்குகளை விசாரிக்க வந்துள்ளதாக கூறிய அவர்கள், பின்னர் கணக்கு காட்டாது வைத்திருப்பதாக வீட்டிலிருந்த தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள், ரொக்கம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு, உரிய வரி ஆவணங்களோடு திருச்சி வருமான வரித்துறை அலுவலகத்துக்கு வந்து பெற்றுக்கொள்ளுமாறு கூறிச் சென்றுள்ளனர்.
வந்தவர்களின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த வீட்டில் உள்ளவர்கள் இதுகுறித்து உறவினர்கள் சிலரிடமும் பேசிவிட்டு, வருமான வரித்துறையினரிடம் விசாரித்ததில், ஜெயப்பிரகாஷ் வீட்டுக்கு வந்தவர்கள் போலியானவர்கள் என உறுதியானது.
நடந்த சம்பவம் குறித்து பாடாலூர் காவல் நிலையத்தில் ஜெயப்பிரகாஷ் புகார் அளித்தார்.
50 சவரன் தங்க நகைகள், 6 கிலோ வெள்ளி, ரூ.5.25 லட்சம் என மொத்தம் ரூ.12 லட்சம் மதிப்பிலானவை கொள்ளை போனதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தை மாவட்ட காவல் உயர் அலுவலர்கள் பார்வையிட்டு விசாரித்து வருகின்றனர்.