

தலைமைக் கழகத்தில் இருந்து அடுத்த அறிவிப்பு வரும்வரை எந்த ஒரு ஊடகத்திலும், பத்திரிகையிலும், சமூக தொடர்பு சாதனங்களிலும் எத்தகைய கருத்துக்களையும் தெரிவிக்க வேண்டாம் என கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் அக்கட்சியின் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று (புதன்கிழமை) நடந்தது.
இக்கூட்டத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவை இடைத்தேர்தல் ஆகியவற்றின் முடிவுகள், கட்சி தலைமை உள்ளிட்ட விவகாரங்கள் மற்றும் பொதுக்குழுவை கூட்டுவது பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது.
இக்கூட்ட நிறைவில், உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது உள்ளிட்ட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்நிலையில், அடுத்த அறிவிப்பு வரும்வரை எந்த ஊடகத்திற்கும், பத்திரிகைக்கும் அதிமுகவினர் கருத்துகூற வேண்டாம் என கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
இதனை மீறுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கட்சி தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
''அதிமுக சார்பில் பத்திரிகைகள், ஊடகங்கள் வழியாகவும் இன்னபிற சமூகத் தொடர்பு சாதனங்கள் வழியாகவும் கருத்துகள் தெரிவிக்கும் பணிக்கென செய்தித் தொடர்பாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். கட்சி நிர்வாகிகளின் ஒப்புதலைப் பெற்ற பிறகே அவர்கள் கருத்துகளைத் தெரிவிக்க உரிமை பெற்றவர்கள்.
நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து அடுத்தகட்ட அரசியல் பணிகள் தொடங்கியிருக்கும் இந்த வேளையில், கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள், தலைமைக் கழகத்தில் இருந்து அடுத்த அறிவிப்பு வரும் வரை எந்த ஓர் ஊடகத்திலும், பத்திரிகையிலும், சமூகத் தொடர்பு சாதனங்களிலும் எத்தகைய கருத்துகளையும் தெரிவிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மற்றவர்கள் யாரும் பத்திரிகைகளிலோ, ஊடகங்களிலோ, இன்னபிற சமூகத் தொடர்பு சாதனங்களிலோ தங்கள் கருத்துகளை கழகத்தின் கருத்துகளாகத் தெரிவிப்பது கூடாது. அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்''.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த வாரம் மதுரை வடக்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா, அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமைதான் வேண்டும் என கருத்து கூறினார். இது கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அதிமுகவில் மீண்டும் விரிசலா என ஊக செய்திகள் உலா வந்தன. இந்நிலையில், இன்று கூடிய மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இது எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இனிமேல் ஊடகப் பேட்டி கொடுக்க அடுத்த அறிவிப்பு வரும்வரை கெடுபிடி விதித்து கட்சித் தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது.