Published : 12 Jun 2019 03:26 PM
Last Updated : 12 Jun 2019 03:26 PM

புதிய கல்விக்கொள்கை குறித்து விவாதித்து தீர்மானம் நிறைவேற்ற அனைத்துக் கட்சிக் கூட்டம்: இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

புதிய கல்விக்கொள்கை குறித்து விவாதித்திட அனைத்துக் கட்சிக் கூட்டத்தை  தமிழக அரசு உடனே கூட்ட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு  சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:

“இந்துராஷ்டிராவாக , இந்தியாவை மாற்ற வேண்டும் என்ற தனது  நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் மத்திய பாஜக அரசு தனது புதிய கல்விக்கொள்கைக்கான வரைவு அறிக்கையை நிபுணர் குழு மூலம் உருவாக்கியுள்ளது.

இந்தி-சமஸ்கிருத திணிப்பு, சாதி அடிப்படையிலான குலத்தொழிலை மீண்டும் கொண்டு வருதல் என்ற நோக்கம் இக்கல்விக் கொள்கையில் உள்ளது. கல்வியை முழுமையாக தனியார் மயமாக்கவேண்டும், கார்ப்பரேட் மயமாக்க வேண்டும், அறிவியலுக்குப் புறம்பான கல்வியை நமது பாரம்பரிய கல்வி முறை என்ற வகையில் திணிக்க வேண்டும் என்ற நோக்கமும் உள்ளது.

சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் ஊழியர்களைக் கற்பிக்கும் பணிகளில் ஈடுபடுத்துதல் என்ற பெயரில், தனது சித்தாந்தம் சார்ந்த அமைப்பினரைக் கற்பிக்கும் பணியில் ஈடுபடுத்திட மறைமுக சூழ்ச்சியை மத்திய அரசு இக்கல்விக் கொள்கை மூலம் செய்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.

இது கல்வியை முழுமையாக காவி மயமாக்கும், இந்துத்துவா மயமாக்கும் முயற்சியாகும்.  இத்தகைய நடைமுறை, நாட்டின் ஒற்றுமை - ஒருமைப்பாட்டையும், பன்முகத்தன்மையையும், வேற்றுமையில் ஒற்றுமை என்ற நிலையையும் சீர்குலைத்துவிடும்.

இளம் உள்ளங்களிடையே இந்துத்துவ நச்சுக் கருத்தை பரப்பிட வழிவகுக்கும். மத்திய அரசின் இக்கல்விக்கொள்கை இந்தியச் சமூகத்தை அறிவியல் மனப்பாங்கோடு முன்னோக்கி இட்டுச் செல்வதற்குப் பதிலாக, பிற்போக்குக் கருத்துக்களுடன் பின்னோக்கி இட்டுச் செல்லும் ஆபத்து உள்ளது.

அறிவியல் தொழில்நுட்பக் கல்வி புறக்கணிக்கப்பட்டு, போலி அறிவியல் புகுத்தப்படும் பேராபத்து உள்ளது. இக்கல்விக் கொள்கையால், சமூக நீதி பாதிக்கப்படும் ஆபத்தும் உள்ளது.

கல்வியை முழுமையாக மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுபோகும் சூழ்ச்சியும் உள்ளது. இது மாநில உரிமைகளுக்கும், பல்வேறு தேசிய இனங்களின் நலன்களுக்கும், உரிமைகளுக்கும் எதிரானது.

இக்கல்விக் கொள்கை குறித்து இதுவரை தமிழக எடப்பாடி பழனிசாமி அரசு கருத்து கூறவில்லை. அதன் காரணம் என்ன என்பது தெரியவில்லை. இந்த மக்கள் விரோத, புதிய கல்விக்கொள்கை குறித்து விவாதித்து, தமிழக மக்களின் ஒட்டுமொத்தக் கருத்தையும் பிரதிபலிக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பிட வேண்டும்.

அதற்கு தமிழக அரசு உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டிட வேண்டும். இந்த கல்விக் கொள்கை ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. இதை அனைத்து மாநில மொழிகளிலும் வெளியிட மத்திய அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

அனைத்து மாநில மொழிகளிலும் இக்கல்விக்கொள்கை வெளியிடப்பட்டால்தான், பல்வேறு மாநில மக்களும் இக்கல்விக் கொள்கையைப் படித்து, தங்களது கருத்தைக் கூற வாய்ப்பு ஏற்படும்.

அந்த வாய்ப்பை உருவாக்கும் வகையில், இக்கல்விக் கொள்கை குறித்து கருத்து தெரிவிப்பதற்கான கால அவகாசத்தை ஆறு மாத காலத்திற்கும் குறைவில்லாமல்  மத்திய அரசு நீட்டிக்க வேண்டும்''.

இவ்வாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x