

மதுரை மத்திய பூ மார்கெட் பகுதியில் இருந்து, மாட்டுதாவணி பேருந்து நிலையம், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை வரை நெடுஞ்சாலையின் இருபுறமும் , சாலையை ஆக்கரமித்து உருவான கடைகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கக் கோரிய மனு மீதான விசாரணையில் மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மேலும், வழக்கு விசாரணையை ஜூன் 10 ஆம் தேதி ஒத்திவைத்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த சந்திரபோஸ் என்பவர் உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், "மதுரை தென் மாவட்டங்களுக்கு இணைப்புப் பாலமாக உள்ளது. நாள் தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் மதுரை மாட்டுதாவணி பேருந்து நிலையத்திற்ககு வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் மாட்டுத்தாவணி பேருந்து நிலைய சாலையில் போக்குவரத்து அதிகமாக உள்ளது. இந்த சாலையில் உள்ள மத்திய பூ மார்கெட் பகுதியில் இருந்து, மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை வரை நெடுஞ்சாலையின் இருபுறமும், சாலையை ஆக்கரமித்து அதிகமான கடைகள் உருவாகிவுள்ளன. இதனால் இந்த சாலையில் காலை, மாலை நேரங்களில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனால் உரிய நேரத்திற்கு பேருந்து நிலையம் செல்ல முடியாமல் காலதாமதம் ஏற்படுகிறது. எனவே, இந்த சாலையில் உள்ள மத்திய பூ மார்கெட் பகுதியில் இருந்து, மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை வரை நெடுஞ்சாலையின் இருபுறமும், சாலையை ஆக்கிரமித்து உருவான கடைகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி அமர்வு முன் இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வந்தது. இது குறித்து , மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 10 ஆம் தேதி ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.