Published : 07 Jun 2019 03:10 PM
Last Updated : 07 Jun 2019 03:10 PM

மொழியின் பெயரால் வியாபாரம் செய்யும் கும்பல் திமுக!- ஜெயக்குமார் தாக்கு

மொழியின் பெயரால் வியாபாரம் செய்யும் கும்பல் திமுக என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஜெயக்குமார், "இருமொழிக் கொள்கை தான் எங்கள் உயிர். இதை முதல்வரும் சொல்லிவிட்டார், அமைச்சர்களும் சொல்லிவிட்டனர், பள்ளிக் கல்வித்துறையும் சொல்லிவிட்டது.

ஆனால், திமுக மொழியின் பெயரால் வியாபாரம் செய்கிறது. இவர்கள் செம்மொழி மாநாடு என்ற பெயரில் ஒரு நாடகம் நடத்தினார்களே, அதன் விளைவு என்ன? பல கோடி ரூபாய் பணம் வீணடிக்கப்பட்டதுதான் மிச்சம். அந்த மாநாட்டால் தமிழ் வளர்ச்சிக்கு என்ன நடந்தது.

உண்மையில் தமிழ் வளர்ச்சிக்காக தமிழகத்தில் நின்றவர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மட்டுமே. எம்.ஜி.ஆர். காலத்தில்தான் தஞ்சையில் உலகத் தமிழ் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது. ஜெயலலிதாவின் ஆட்சியில்தான் 8-வது உலகத் தமிழ் மாநாடு நடத்தப்பட்டது. அவர்தான் அறிவியல் தமிழுக்கு வித்திட்டார். அதனால்தான் இன்று கணினியிலும் தமிழ் என்ற நிலையை எட்டியுள்ளோம்.

தமிழுக்கு நாங்கள் என்ன தொண்டாற்றினோம் என்பதை எங்களால் மேடைபோட்டு சொல்லமுடியும். திமுகவினரால் முடியுமா? தமிழை வியாபாரம் செய்யும் வியாபாரிகள் அல்ல நாங்கள்.

திமுக குடும்பத்தினர் நடத்தும் பள்ளியில் இந்திதான் கற்றுத் தருகிறார்கள்.

இருமொழிக் கொள்கை தான் எங்கள் உயிர். மக்கள் விரும்பாத மொழியை நாங்கள் விரும்பமாட்டோம். மக்கள் கருத்தே எங்கள் கருத்து. 1965-ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை மறந்திருக்க முடியும்.

எத்தனை பேர் உயிர்த்தியாகம் செய்தனர். அப்போது ஓய்ந்ததுதான் காங்கிரஸ். இன்னும் அவர்களால் தேற இயலவில்லை. அதனால், தமிழகத்தைப் பொறுத்தவரை மொழியைத் தொட்டவன் கெட்டான் என்றே நான் சொல்வேன்" என்று பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x