

சென்னையில் குடிநீர்ப் பிரச்சினையைப் போக்க, கூடுதலாக கல் குவாரிகளைக் கண்டறிந்து அவற்றில் இருந்து தண்ணீர் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச யோகா தினம் நாளை (ஜூன் 21) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னை, கோபாலபுரத்தில் தனியார் நீரிழிவு மையத்தின் யோகா நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் யோகா செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
''சென்னைக்கு கூடுதலாகக் குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏரிகளைக் குடிநீர் ஏரியாக மாற்ற ஜெயலலிதா நடவடிக்கை எடுத்தார். குறிப்பாக அயனம்பாக்கம் ஏரி, கொரட்டூர் ஏரிகளில் முறையே ரூ.32 கோடி மற்றும் ரூ.30 கோடி செலவில் குடிநீராக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
சென்னையின் தாகத்தை ஓரளவுக்காவது தணிக்க முயன்று வருகிறோம். இதற்காக நாள் ஒன்றுக்கு 525 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை முதன்முதலில் கொண்டு வந்தவர் ஜெயலலிதா. அந்தத் திட்டத்தைத் தீவிரப்படுத்த நடவடிக்கைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இன்னும் அடையாளம் காணப்படாத இடங்கள், குறிப்பாக குவாரிகளில் இருந்து தண்ணீர் எடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதன் மூலம் சென்னை மக்களின் குடிநீர் பிரச்சினை குறையும்.''
இவ்வாறு தெரிவித்தார் மாஃபா பாண்டியராஜன்.
தமிழகத்தில் வட கிழக்குப் பருவமழை பொய்த்த நிலையில், நீர் நிலைகள் வறண்டு காணப்படுகின்றன. தலைநகர் சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளும் வறண்டு பெரும் தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது.
குறிப்பாக, சென்னையைச் சுற்றியுள்ள ஏரிகள், குளங்கள், நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு காரணமாக சென்னைக்கு எப்போதும் குடிநீர் தட்டுப்பாடு இருந்து வருகிறது. 80 லட்சம் மக்கள் தொகையை நெருங்கி வரும் பெருநகரச் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளின் பல இடங்களிலும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவது குறிப்பிடத்தக்கது.