Published : 27 Jun 2019 08:39 AM
Last Updated : 27 Jun 2019 08:39 AM

புலி தாக்கி மாண்ட வீரர்கள் நினைவாக நடுகற்கள்!- 400 ஆண்டுகளுக்கு முற்பட்டவை

குறிஞ்சியும், முல்லையும் சார்ந்த பகுதிகள் நிறைந்தது கொங்கு மண்டலம். அக்காலத்தில் இனக் குழுவாக வாழ்ந்த மக்கள் வேளாண்மை, கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வந்தனர். பண்டைய ஆறை நாட்டில் இருந்த அவிநாசியில் இருந்து நடுவச்சேரி செல்லும் சாலையில்  சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பெரிய ஒட்டப்பாளையம்.

இங்கு, கால்நடைகளை மேய்க்கும்போது புலி தாக்கி மாண்ட வீரர்களுக்கான இரு  நினைவு நடுகற்கள் கண்டறியப்பட்டுள்ளன. திருப்பூர் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த சு.ரவிக்குமார், க.பொன்னுச்சாமி, ரா.செந்தில்குமார் ஆகியோர்  இது தொடர்பாக கள ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து சு.ரவிக்குமார் கூறியதாவது:

கொங்கு மலைப் பகுதிகளிலும், சமவெளிகளிலும் கால்நடை வளர்ப்பு அதிக அளவில் உள்ளது.  இங்கு சிறிய ஓடைகள் அதிகம் என்பதால், இயற்கையிலேயே ஈரப்பசையைப் பாதுகாத்து வைக்கும் தன்மை மிகுந்ததாக நிலப்பகுதிகள் விளங்குகின்றன. இதனால்,  கால்நடைத் தீவனமான புல்  வகைகள் நன்கு வளர்கின்றன.

தற்போது கிடைத்துள்ள முதல் நடுகல் 100 செ.மீ. உயரம், 50 செ.மீ. அகலம் கொண்டது. இரண்டாவது நடுகல் 90 செ.மீ. உயரம், 50 செ.மீ. அகலம் கொண்டதாகும். இரண்டு நடுகற்களிலும் வீரனின் அள்ளிமுடிந்த குடுமி இடதுபுறம் சாய்ந்துள்ளது.

வளர்ந்து தொங்கும் காதில் உள்ள குண்டலம் வீரனின் தோள்களைத் தொட்டவாறு உள்ளது. வீரர்கள் தங்கள் கழுத்தில் கண்டிகை, சரப்பளி வகை அணிகலன்களும், தோள்மீது தோள் மாலையும்,  முழங்கையில் கடகவளையும், மணிக்கட்டில் வீரக் காப்பும், கால்களில் வீரக்கழலும் அணிந்து  காட்சியளிக்கின்றனர்.இரண்டு வீரர்களுமே இடையில் மட்டும் ஆடை அணிந்து, தங்களை இடதுபுறம் தாக்கும் புலியை வணங்கும்படி இந்த நடுகற்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இதுவரை கொங்கு மண்டலத்தில் கிடைத்துள்ள  பெரும்பாலான நடுகற்களில், வீரர்கள் தங்கள் கையில் உள்ள குறுவாள் அல்லது ஈட்டி மூலம் புலியைத் தாக்கும் வகையிலான கற்கள்தான் கண்டறியப்பட்டன. ஆனால் இந்த இரண்டு நடுகற்களிலும்,  ஆயுதங்கள் இல்லாமல் வீரர்களின் வலதுபுறம் கவைக்கோல்  இருப்பதாக காட்டப்பட்டுள்ளது. சங்க காலம் முதல், தற்போது வரை இந்தக் கவைக்கோல் மூலம்தான், கால்நடைகளின் உணவுக்காக காட்டில் உள்ள  செடிகளையும், கொடிகளையும் வெட்டியுள்ளனர்.

பண்டைய தமிழ்ச் சமூகத்தில், கால்நடை மேய்க்கும்போது உயிர்விட்ட மேய்ப்பவர்களுக்கும்  நடுகற்கள் எடுக்கும் வழக்கம் இருந்துள்ளதை இதன் மூலம் அறிய முடிகிறது. கொங்கு மண்டல மக்களின் வாழ்வியலை எடுத்துரைக்கும் இந்த நடுகற்களில் எழுத்துப் பொறிப்புகள் இல்லை.  சிலை அமைப்பை வைத்துப் பார்க்கும்போது இவை சுமார் 400 ஆண்டுகள் பழமையானவை என்பது தெரிகிறது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x