

மருத்துவ மேற்படிப்புக்கு தகுதி இருந்தும், அரசின் புதிய நிபந்தனைகளால் மேற்படிப்பில் சேர முடியாமல் உள்ளவர்கள் யார் என்பது பற்றிய அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழகத்தில் 2019-20- ம் கல்வியாண்டில், மருத்துவ மேற்படிப்புக்கான விளக்கக் குறிப்பேட்டை தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் வெளியிட்டது.
அதில், மருத்துவ முதுநிலை படிப்புக்கு 40 லட்சம் ரூபாயும், மருத்துவ பட்டய மேற்படிப்புக்கு 20 லட்சம் ரூபாயும் பிணைத் தொகையாக செலுத்த வேண்டும் எனவும், இரு அரசு உயர் அதிகாரிகளிடம் இருந்து உத்தரவாத பத்திரம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை எதிர்த்து சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் சரவணன் பொது நல வழக்கு தாக்கல் செய்தார். அதில், அரசு அதிகாரிகளிடம் இருந்து உத்தரவாதம் பெறுவது இயலாது எனவும், இது மாணவர்களின் சேர்க்கை ரத்தாக காரணமாகிவிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு, மருத்துவ மேற்படிப்புக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நபர்களின் முழுவிவரத்தையும், தகுதி இருந்தும் புதிய நிபந்தனைகளால் மருத்துவ மேற்படிப்பில் சேர முடியாமல் யாரும் உள்ளனரா என்பது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
மேலும், மருத்துவ மேற்படிப்பில் தற்போதுள்ள காலியிடங்கள் குறித்த விவரத்தையும் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் ஜூன் 10-க்கு ஒத்தி வைத்தனர்.