Published : 02 Jun 2019 12:00 AM
Last Updated : 02 Jun 2019 12:00 AM

விதிமீறல் கட்டிடங்களுக்கு வரி நிர்ணயம் கூடாது: மாநகராட்சிகளுக்கு நகராட்சிகள் நிர்வாக ஆணையர் உத்தரவு

மாநகராட்சிகள் வழங்கும் வரைபடஅனுமதிப்படி கட்டிடங்கள் கட்டாமல் விதிமீறி கட்டப்படும் கட்டிடங்களுக்கு வரி நிர்ணயம் செய்யக்கூடாது என நகராட்சிகள் நிர்வாக ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

மாநகராட்சிகளில் வீடு, கடை,திருமண மண்டபம் மற்றும் வணிகவளாகங்கள் கட்டுவோர் அதற்கு கட்டிட வரைபட அனுமதி பெறவேண்டும். வீடுகளைப் பொறுத்தவரை 4 ஆயிரம் சதுர அடி வரையிலான கட்டிடங்களுக்கு மாநகராட்சி கட்டிட அனுமதி வழங்குகிறது. அதற்கு மேலான கட்டிடங்களுக்கு உள்ளூர் திட்டக்குழுமம் அனுமதி வழங்குகிறது.

வணிக நிறுவனங்கள் ஒவ்வொரு 50 சதுர மீட்டருக்கும் ஒரு கார் நிறுத்தும் அளவுக்கு வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்த வேண்டும். அந்த ஒரு வாகன நிறுத்துமிடம் 2.5 மீட்டர் அகலம், 5 மீட்டர் நீளம் அளவில் இருக்க வேண்டும். 5 அடுக்கு மாடி கொண்ட பெரும் வணிக நிறுவனம் குறைந்தபட்சம் 300-க்கும் மேற்பட்ட கார்களையும், இரு சக்கர வாகனங்களையும் நிறுத்தும் அளவுக்கு வாகன நிறுத்தும் வசதி ஏற்படுத்த வேண்டும்.

அதுபோல், 25 வீடுகள் அமைந்தஓர் அடுக்குமாடி குடியிருப்புக்கு 25 இரு சக்கர வாகனங்கள், 25 கார்கள் நிறுத்தும் அளவுக்கு வாகன நிறுத்தும் வசதி ஏற்படுத்த வேண்டும். உணவகமாக இருந்தால் 100 சதுர மீட்டருக்கு ஒரு காரும், 1,000 சதுர மீட்டருக்கு 10 கார்களும் நிறுத்துவதற்கு வாகன நிறுத்தும் வசதி ஏற்படுத்த வேண்டும்.

திருமண மண்டபங்களாக இருக்கும்பட்சத்தில் 20 சதுர மீட்டருக்கு ஒரு காரும், குடோன்களுக்கு 500 சதுர மீட்டருக்கு ஒரு லாரியும் நிறுத்துவதற்கு வாகன நிறுத்தும் வசதி ஏற்படுத்த வேண்டும்.

ஆனால், இந்த வாகன நிறுத்தும் வசதிகளை ஏற்படுத்தும் நிறுவனங்களுக்கே உள்ளூர் திட்டக்குழுமமும், மாநகராட்சியும் அனுமதி வழங்க வேண்டும். ஆனால், வாகனம் நிறுத்தும் பகுதியில் குறைவான கார்களை நிறுத்துவதற்கு அனுமதித்துவிட்டு மீதி இடங்களைகுடோன்களாக மாற்றி விடுகின்றனர். இரு சக்கர வாகனங்களுக்கு வாகன நிறுத்தும் வசதி ஏற்படுத்துவதே இல்லை.

கட்டிடங்களைப் பொறுத்தவரையில் வரைபட அனுமதி பெற்றாலும் அதில் உள்ளபடி கட்டினால் சிறிது மாறுதல்கள் மட்டுமே செய்து கட்டுவார்கள். வீடுகள் கட்டுவோர் பெரிய அளவில் மாறுதல் செய்வது கிடையாது. ஆனால், திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் மற்றும் கடைகள் கட்டுவோர், கட்டிடம் வேறு வடிவமைப்பிலும், வரைபடத்தில் அனுமதி வேறு மாதிரியும் இருக்கும்.

இந்தக் கட்டிடங்களுக்கு வரைபட அனுமதி வழங்குவது தொடங்கி வரி நிர்ணயம் செய்வது வரை நடக்கும் இந்த விதிமீறல்களை மாநகராட்சி அதிகாரிகள் கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்தால்அவர்களுக்கு ஆதரவாக ஆளும்கட்சியினர், எதிர்க்கட்சியினர் செயல்படுகின்றனர். அதனால், மாநகராட்சி அதிகாரிகள் ஓரளவுவிதிமீறல் இருந்தால் அதற்குஅபராதம் கட்டச் சொல்லிவிட்டு அந்தக் கட்டிடங்களுக்கு வரி நிர்ணயம் செய்கின்றனர்.

இந்நிலையில், உயர் நீதிமன்றம் விதி மீறல் கட்டிடங்கள், ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் தற்போது நகராட்சிகள் நிர்வாக இயக்குநர், அனைத்து மாநகராட்சிகளுக்கும் விதி மீறல் கட்டிடங்களுக்கு வரி நிர்ணயம் செய்யக்கூடாது என்று பல கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘மாநகராட்சி அனுமதி வழங்கிய கட்டிட வரைபடத்தின் அடிப்படையில்தான் இனி கட்டிடங்கள் கட்ட வேண்டும். விதிமீறி கட்டப்படும் கட்டிடங்களை இடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அந்தக் கட்டிடத்துக்கு வரி நிர்ணயம் செய்யக்கூடாது, மின் இணைப்பு வழங்கக்கூடாது, குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு வழங்கக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இதை மீறி செயல்படும் அதிகாரிகள் பதவி இறக்கம் செய்யப்படுவார்கள். மாதந்தோறும் கட்டிட வரைபட அனுமதி, வரி நிர்ணயம் செய்யப்படும் கட்டிடங்களை ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகள், விதிமீறல்களைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கெனவே கட்டிட அனுமதி வழங்கிய கட்டிடங்களுக்கு விதிமீறல் இருந்தால் அபராதம் வழங்கி வரி நிர்ணயம் செய்கிறோம். இனி புதிய உத்தரவுப்படி கட்டிடங்கள் கட்டுவதில் கடும் கட்டுப்பாடுகளும், நடவடிக்கைகளும் இருக்கும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x