Published : 07 Jun 2019 02:24 PM
Last Updated : 07 Jun 2019 02:24 PM

போக்குவரத்து விதிமீறல் கருவிகள் பயன்படுத்தாத நாளே நாம் விரும்பும் நாள்: காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்

போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோரிடம் அபராதம் வசூலிக்க 352 அதி நவீன இ-.சலான் கருவிகள், புகாரளிக்க புதிய செல்போன் செயலியை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன். அறிமுகப்படுத்தினார்.

இந்த நவீன இ.சலான் கருவி விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலிக்க பயன்படுத்தப்படுகிறது. இதில் ஜிபிஎஸ் பொருத்தப்பட்டுள்ளதால் காவலர்களின் இருப்பிடத்தையும் கண்காணிக்க முடியும்.

வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தோடு, நவீன கருவி இணைக்கப்படும். ஓட்டுநர்கள் தொடர்ந்து விதிமீறலில் ஈடுபட்டால், ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய இ சலான் கருவி மூலம் பரிந்துரை செய்யும் வசதியும் உண்டு.

இ-சலான், செல்போன் செயலி அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், பேசியதாவது:

 ''நீங்கள் குடியிருக்கும் பகுதிகளில் இதைப் பயன்படுத்தலாம், உங்கள் புகாரை கடிதம் அல்லது மெயிலுக்குப் பதிலாக, வீடியோவாக அனுப்பினால் எங்களுக்கும் தெளிவு கிடைக்கும். உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்துக்கு ஒருவர் விரைந்து சென்று, செயலாற்றுவதற்கான திட்டம் இது.

நவீனத் தொழில்நுட்பங்களை மேம்படுத்தி, மக்கள் சேவையை அதிகப்படுத்துவோம். இந்த செயலியில் புகார்களே வராத சூழல் உருவாக வேண்டும். இ-சலான் கருவி மூலம் அபராதம் கட்டப்படுவதை எளிதாக்கி உள்ளோம்.

ஆனால் அதைவிட முக்கியம் அபராதமே கட்டாத நிலை ஏற்பட வேண்டும்.சாலை விதிகளை மதிக்க வேண்டும். இந்தியாவில் அதிக இறப்புகள் ஏற்படுவது சாலை விபத்துகளால்தான். வாகனங்கள் அதிகரித்துள்ள இந்த காலகட்டத்தில், சுய ஒழுங்கு மட்டுமே விபத்துகளைக் குறைக்க முடியும்.

இந்த கருவிகளைப் பயன்படுத்துவதற்கான தேவையே ஏற்படாத நாள்தான், முழுமையான நாளாக அமையும். இந்த கருவியை உருவாக்கத் திட்டமிட்ட அனைவருக்கும் நன்றிகள்'' என்று தெரிவித்தார்.

இந்த விழாவில் கூடுதல் ஆணையர்கள் மகேஷ்குமார் அகர்வால், அருண், இணை ஆணையர் அன்பு உள்ளிட்ட காவல் உயர் அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x