

மழைக்காக யாகம் நடத்துங்கள் என்று அதிமுகவின் 53 மாவட்டச் செயலாளர்களுக்கும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவுறுத்தியுள்ளனர்.
குறிப்பாக தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் மழை வேண்டி சிறப்பு யாக பூஜை நடத்துமாறு ஓபிஎஸ், ஈபிஎஸ் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பருவமழை பொய்த்த நிலையில், தமிழகம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு கடுமையாக நிலவுகிறது. குடிநீரை வழங்கிய நீராதாரங்களான ஏரிகள், குளங்கள், கிணறுகளில் பெரும்பாலானவை வற்றிவிட்டன.
இந்நிலையில் மழைக்காக சிறப்பு யாகங்களை நடத்துமாறு, அதிமுகவின் 53 மாவட்டச் செயலாளர்களுக்கும் அக்கட்சியின் தலைமை அறிவுரை வழங்கியுள்ளது. இந்தப் பூஜைகளில் அமைச்சர்களும் சட்டப்பேரவை உறுப்பினர்களும் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து சென்னை, மேற்கு மாம்பலத்தில் உள்ள காசி விஸ்வநாதர் திருக்கோயில் உள்ளிட்ட கோயில்களில் யாகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று (சனிக்கிழமை) காலை 8.30 மணிக்கு யாகங்கள் தொடங்க உள்ளன.
இதுதொடர்பாக நேற்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, " அதிமுக மதுரை மாநகர் மாவட்டக் கழகம் சார்பாக இன்று (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு மீனாட்சியம்மன் கோயிலில் மழைக்காக வருண ஜெபம் நடத்தப்பட உள்ளது. சுமார் 25 சிவாச்சாரியார்களைக் கொண்டு யாக பூஜை நடத்தப்பட உள்ளது. அத்துடன் 4 ஓதுவார்கள் மழை வேண்டி பாடல்கள் பாடுவர்" என்று தெரிவித்தார்.